தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் வாயிலாக, “புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27 (New India Literacy Programme 2022-27 ) என்கிற புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முற்றிலும் தன்னார்வலர்களைக் கொண்டு இப்புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2022-23 ஆம் நிதியாண்டிலிருந்து 2026-27ஆம் நிதியாண்டு வரை செயல்படுத்தும் வகையில் ஐந்தாண்டுத் திட்டமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில், அனைத்து மாவட்டங்களிலும், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத சுமார் 5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுக் கல்வியை வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் (New India Literacy Programme 2022-27) செயல்படுத்தப்படும்.
தலைமையாசிரியர் பணிகள் மற்றும் பொறுப்புகள்:
கற்போர்களை கண்டறிதல் :
* 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத அனைவரையும் (ஆண், பெண் திருநங்கைகள் ) கண்டறிதல்.
* பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் உதவியுடன் முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை கண்டறிதல்.
* பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் , தன்னார்வலர்கள் உதவியுடன் குடியிருப்பு பகுதியிலுள்ள முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோரைக் கண்டறிதல்.
* வட்டார வளர்ச்சி அலுவலக நூறு நாள் வேலைத்திட்ட பதிவேடு , மகளிர் சுய உதவிக்குழு பதிவேடு , குடும்ப விவர கணக்கெடுப்பு பதிவேடு மற்றும் இதுபோன்ற பிறவற்றின் மூலம் முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோரைக் கண்டறிதல்.
* அருகிலுள்ள தொழிற்சாலை, நிறுவனங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மூலம் முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோரை கண்டறிதல்.
* மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உதவியுடன் குடியிருப்புப் பகுதியில் கற்றலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்துதல்.
*மேற்கண்டறிந்த விவரங்களை சார்ந்த பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் / பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து -கள ஆய்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கேற்ப கற்போர் விவரங்கள் மற்றும் எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும்.
தன்னார்வல ஆசிரியர்களை நியமித்தல்:
* பள்ளியைச் சார்ந்த குடியிருப்பு பகுதியிலுள்ள 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடைய கற்பித்தலில் ஆர்வம் மற்றும் சேவை மனப்பான்மையுடன் பணிபுரியக்கூடிய நபர்களை கண்டறிந்து தன்னார்வல ஆசிரியர்களாக நியமித்தல் வேண்டும்.
*பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர் பயிற்சிபெறும் மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்டம் / சாரண சாரணியர் , தேசிய மாணவர் படை மாணவர்கள், வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் முன்னர் பணியாற்றிய தன்னார்வல ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள், நேரு யுவகேந்திர தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரைத் தன்னார்வல ஆசிரியர்களாக நியமிக்கலாம்.
* தேர்வு செய்யப்படும் தன்னார்வல ஆசிரியர்கள் திட்டக் காலம் முடியும்வரை (ஆறு மாதம்) தொடர்ந்து பணிசெய்வதை உறுதி செய்தல் வேண்டும்.
கற்போர் மையங்களை அமைத்தல் :
* அரசு / அரசு உதவி பெறும் தொடக்க , நடுநிலை , உயர்நிலை மேல்நிலைப் பள்ளியின் குடியிருப்பு பகுதியில் முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோர் இருப்பின் அப்பள்ளி கட்டாயம் கற்போர் மையமாக செயல்பட வேண்டும். 10 மற்றும் அதற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு கற்போர் மையம் பள்ளியில் தொடங்கப்பட வேண்டும்.
* கற்றல் கற்பித்தல் பணியை அதே பள்ளியிலோ, குடியிருப்பு வளாகத்திலோ, நூறு நாள் வேலைத் திட்டம் நடைபெறும் இடத்திலோ, பணிபுரியும் தொழிற்சாலை வளாகத்திலோ அமைத்து கற்பிக்கும் பணியைச் செயல்படுத்தலாம்.
*பள்ளி வேலை நாள்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு 2 மணி நோம் வீதம், 6 மாதத்தில் 200 மணி நேரம், கற்றல் கற்பித்தல் பணி கட்டாயம் நடைபெறுதல் வேண்டும்.
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் :
* தினசரி பாடத்திட்ட அட்டவணைப்படி கற்றல் கற்பித்தல் நடைபெறுதல் வேண்டும்.
* தேவைப்படும் நேரங்களில் தன்னார்வல ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஆலோசனை வழங்கி ஊக்கப்படுத்துதல் வேண்டும்.
*பள்ளியில் உள்ள கற்றல் கற்பித்தல் உபகரணங்களை தேவைக்கேற்றவாறு தன்னார்வல ஆசிரியர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
* கற்போரை ஆர்வமூட்டும் வகையில் தன்னம்பிக்கை சார்ந்த கதைகள், மனதிற்கு உற்சாகம் தரும் பாடல்கள் மற்றும் தினந்தோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைக் கூறுதல் ஆகியவை இடம் பெறவேண்டும்.
* தினசரி பாடத்திட்டத்திற்கேற்றவாறு எழுதும் பயிற்சியை வழங்குதல் வேண்டும்.
கண்காணித்தல்
* கற்போர் தினமும் மையங்களுக்கு 100% வருகை புரிவதை உறுதி செய்யவேண்டும்.
* கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை தலைமையாசிரியர், ஆசிரியர் உற்றுநோக்குதல் வேண்டும்.
* கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வகையில் கணினியில் உள்ளீடு செய்தல் வேண்டும்.
* கற்போருக்கு கற்பிக்கப்படும் வாழ்வியல் திறன் சார்ந்த கல்வியறிவை வழங்க அதன் தொடர்புடைய நபர்களைக் கொண்டு சிறப்பு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.
* முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆய்வின்போது தலைமையாசிரியர் தங்கள் பள்ளியுடன் இணைக்கப்பட்டுள்ள மையங்கள், தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் கற்போர் விவரங்களை தெளிவாக வழங்க தயார் நிலையில் இருக்கவேண்டும்.
* பள்ளி மற்றும் கற்றல் கற்பித்தல் நடைபெறும் இடங்களான நூறு நாள் வேலைதிட்டம் நடைபெறும் இடம், தொழிற்சாலை, குடியிருப்பு பகுதி ஆகிய இடங்களையும் பார்வையிடவேண்டும்.
பதிவேடுகள் பராமரித்தல் :
* கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்களின் விவரங்களுடன் விவரப் பதிவேடுகளை வலைதளத்தில் மற்றும் கைபேசி செயலிகளில் உள்ளீடு செய்யும் வகையில் தனித்தனியாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
* தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் கற்போர் வருகைப் பதிவேடு ஆகியவை தனித்தனியாக பராமரிக்கப் படுவதை உறுதி செய்யவேண்டும்.
மதிப்பீடு :
* கற்போர்கள் அனைவரும் பயிற்சியின் இறுதியில் நடைபெறும் மதிப்பீட்டுத்தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுத ஊக்கப்படுத்த வேண்டும்.
* பயிற்சியின் இறுதியில் நடைபெறும் மதிப்பீட்டில் அனைத்து கற்போரும் பங்குபெறுவதை உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.