ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதிய செயலியை இன்று (அக்.31) அறிமுகம் செய்தார். இதன்மூலம் ஆசிரியர்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.


பள்ளிக் கல்வித்துறை சார்ந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன. அதேபோல ஆசிரியர்களும் கற்பித்தல், நிர்வாகம், எழுத்து, ஒருங்கிணைத்தல் பணிகள் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை பல்லாண்டு காலமாக முன் வைக்கின்றனர். இந்த நிலையில் இவை அனைத்துக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி இணையம் வாயிலாக கோரிக்கைகளை அனுப்பும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 


உடனடியாகத் தீர்வு காணப்படும்


செயலியை அறிமுகம் செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறும்போது, ’’குறிப்பிட்ட பிராந்தியங்களில் என்ன மாதிரியான பிரச்சினை இருக்கிறது? அதை எப்படி தீர்த்து வைப்பது? என்பதை அறிய இந்த செயலி உதவும். பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்கள், துணை இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர்,  மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் என்ற அளவில் பிரச்சினைகள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு, உடனடியாகத் தீர்வு காணப்படும். 


உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு, எப்படி தனியாக துறை இருந்து செயல்படுகிறதோ, அதேபோல இந்தத் திட்டமும் செயல்படும். துறை அதிகாரிகள், செயலியில் பதிவு செய்யப்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பர். துறை சார்ந்த கூட்டங்கள் நடைபெறும்போது, ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமும் மீதமுள்ள, சரிசெய்யப்படாத பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்படும். அங்கேயே தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் அன்பில் தெரிவித்தார். 


தொடர்ந்து போட்டித் தேர்வு நடத்தப்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தவர், ’’2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் உணர்வை வெளிப்படுத்துகின்றனர். அடுத்தடுத்து 2014, 17, 19-ல் தேர்ச்சி பெற்ற 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேறு விதமான உணர்வை அரசிடம் வெளிப்படுத்தி வருகின்றனர். எல்லோரின் உணர்வுகளையும் மதித்து, திருப்திப்படுத்தும் வகையில் வழிவகைகளை அமைத்து, சிறந்த முடிவு எடுக்கப்படும். தரமான கல்வியை வழங்கும் வகையில், எதிலுமே அனுசரித்துப் போகாமல், தரமான ஆசிரியர்களை உருவாக்க உள்ளோம்’’ என்று அமைச்சர் அன்பில் தெரிவித்தார். 


செயலி எப்படி செயல்படும்?


ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் தங்களின் குறைகள், கோரிக்கைகளைப் பதிவு செய்யலாம். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்றும், கோரிக்கை ஏற்கப்படுகிறதா நிராகரிக்கப்படுகிறதா என்றும் இணையம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், செயலி மூலமாக இன்று அமலுக்கு வந்துள்ளது.