நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு படிக்கும் 2 சமூக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், இந்த விடுமுறை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2 ஆயிரம் மாணவர்கள்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த முதுகலை பட்டப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், சுமார் 2,000 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு 2 சமூக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மோதல் உருவான நிலையில், ஒரு மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கால வரையற்ற விடுமுறை
இதனால் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் 24 துறைகளின் மாணவர்களுக்கு கால வரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மறு தேதி அறிவிக்கும் வரை யாரும் பல்கலைக்கழகத்துக்கு வர வேண்டாம் எனவும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் குறித்து பேட்டை காவல் துறையினர், விசாரணை செய்து வருகின்றனர்.
அண்மையில், திருநெல்வேலியில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்த நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆண் ஆணவக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.