2024ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான (நீட்) பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை மருத்துவ ஆணையத்தின்கீழ் இயங்கும் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் தயாரித்து வெளியிட்டுள்ளது. 


நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.  


மாணவர் சேர்க்கை


நாடு முழுவதும் உள்ள 645 மருத்துவக் கல்லூரிகள், 318 பல் மருத்துவக் கல்லூரிகள், 914 ஆயுஷ் கல்லூரிகள், 47 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், நீட் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. மாநிலக் கல்லூரிகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் 100 சதவீத ஒதுக்கீட்டுக்கும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள மாநிலக் கல்லூரி இடங்கள், சொந்த மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. 


நீட் தேர்வில் அடிப்படை மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் மட்டுமே, மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள் ஆவர். நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, கலந்தாய்வில் உரிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும். 


2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் ஜூன் 2வது வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிற தேர்வுகள் எப்போது?


இதேபோல் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஜேஇஇ தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறும். இதில் முதல் கட்டத் தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் நடைபெறும். 2 ஆம் கட்ட தேர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் சேர  நடத்தப்படும் க்யூட் (CUET) பொது நுழைவுத் தேர்வு மே 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும். க்யூட் முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு மார்ச் 11 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுஜிசி நெட் தேர்வு ஜூன் 10 ஆம் தேதி முதல் 21ஆம் தேதிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



 
பாடத்திட்டம் வெளியீடு


2024ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான (நீட்) பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை மருத்துவ ஆணையத்தின்கீழ் இயங்கும் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் தயாரித்து வெளியிட்டுள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் கல்லூரிகளும் https://www.nmc.org.in/MCIRest/open/getDocument?path=/Documents/Public/Portal/LatestNews/NEET%20UG%202024_Approved_Final.pdf


என்ற இணைப்பை க்ளிக் செய்து, பாடத்திட்டத்தைக் காணலாம். 


தொலைபேசி எண்: 011- 40759000 
இ- மெயில்: neet@nta.ac.in