இளங்கலை மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகி உள்ள நிலையில், கல்லூரிகளில் சேரும் முன் மாணவர்கள் எவற்றை எல்லாம் கவனத்தில்கொள்ள வேண்டும்? காணலாம்.

கல்லூரிகளின் ஆராய்ச்சி, அங்கீகாரம், தரவரிசை, பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்களின் தரம், மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம், உள்ளுறைப் பயிற்சி, கல்லூரி சூழல், வேலைவாய்ப்பு ஆகிய அம்சங்கள் முக்கியம் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆராய்ச்சி

மருத்துவக் கல்லூரிகள் குறித்து, அவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள், முன்னாள் மாணவர்களின் கருத்துகள், சமூக வலைதள பக்கங்கள், மாணவர்களின் தகவல்கள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும்.

 அங்கீகாரம், தரவரிசைப் பட்டியல் அறிதல்

அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் ஒன்று கிடையாது. சம்பந்தப்பட்ட கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றவையா என்று பாருங்கள். NIRF தரவரிசைப் பட்டியல், பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ஆகியவற்றையும் சரிபார்க்க வேண்டியது முக்கியம்.

பாடத்திட்ட விவரங்கள்

கல்லூரிகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதும் முக்கியமான ஒன்று. அரசு மருத்துவக் கல்லூரியோ, தனியார் மருத்துவக் கல்லூரியோ அங்கு கற்பிக்கப்படும் பாடங்கள், வழங்கப்படும் சிறப்புப் பாடங்கள், மருத்துவம் வழங்கப்படும் பயிற்சி அளவு ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள்,

கட்டமைப்பு, பிற வசதிகள்

கல்லூரிகளில், ஒரு நல்ல கற்றல் சூழல் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. கல்லூரியில் கீழே உள்ளவற்றை உறுதி செய்துகொள்ளுங்கள்:

  • நவீன ஆய்வகங்கள்

  • ஆய்வக அரங்குகள்

  • விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள்

  • சுத்தமான மற்றும் பாதுகாப்பான விடுதிகள்

  • நூலகங்கள் மற்றும் இணைய வசதி

மாணவர் சேர்க்கை செயல்முறை

குறைந்த கட்டணங்கள் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரிகள் எளிதில் நிரம்பிவிடும். அதே நேரத்தில் உங்கள் பொருளாதாரம் அனுமதித்தால் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். ஒவ்வொரு கல்லூரியின் கட்ஆஃப்கள், இட ஒதுக்கீடு மற்றும் சேர்க்கை நடைமுறைகளை கவனமாகப் புரிந்துகொள்ளுங்கள்.

ஆசிரியர்களின் தரம்

கற்பித்தல் தரம் கல்லூரிகளுக்கு மிகவும் முக்கியமானது. ஆசிரியர்களின் தரம், அனுபவம், ஆசிரியர்- மாணவர் விகிதம் மற்றும் கற்பித்தல் முறைகளை அறியுங்கள்.

உள்ளுறைப் பயிற்சி (Internship)

மருத்துவக் கல்வியின் முக்கியமான ஓர் அங்கம் மருத்துவம் வழங்கும் பயிற்சி (Clinical training) இதற்கான வாய்ப்பு சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சீரான இடைவெளிகளில் உள்ளுறைப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

இருப்பிடம் மற்றும் சுற்றுச்சூழல்

கல்லூரிகள் அமைந்திருக்கும் இடத்தை கவனியுங்கள். வீட்டில் இருந்து அதன் தூரம், போக்குவரத்து, காலநிலை, உள்ளூர் மொழி மற்றும் பாதுகாப்பைப் பாருங்கள். இவை உங்கள் வசதியையும் செயல் திறனையும் பாதிக்கலாம்.

வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள்

பொதுவாக அரசுக் கல்லூரிகளால் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்றாலும், பல தனியார் நிறுவனங்கள் மருத்துவமனைகள், சுகாதாரச் சங்கிலிகள், அரசு சாரா நிறுவனங்களுடன் ஒத்துழைப்புகளைக் கொண்டுள்ளன.

இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்து தீர விசாரித்து, மருத்துவக் கல்லூரிகளைத் தேர்வு செய்யுங்கள்.

வாழ்த்துகள்!