தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து நாளை காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளைக் கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் பங்கு பெற உள்ளார்.
வேகமெடுக்கும் நீட் விவகாரம்
நீட் தேர்விலும் மதிப்பெண்களிலும் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக நாடு முழுவதும் புகார் குரல்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக முதலிடம் பெற்ற 6 தேர்வர்கள் மற்றும் அதற்கு அடுத்தடுத்த இடங்கள் பெற்ற இருவரின் பதிவு எண்கள் அடுத்தடுத்த வரிசை எண்களில் உள்ளது. இது சந்தேகத்தைக் கிளப்பி உள்ளது.
நீட் போன்ற கடினமான நுழைவுத் தேர்வு குறித்து என்னதான் விழிப்புணர்வும் பயிற்சி பெறுவதும் அதிகரித்து இருந்தாலும் 67 பேரால் முழு மதிப்பெண்களைப் பெற முடியுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்து வருகின்றனர். குறிப்பாக நீட் தேர்வை ஒழித்துக் கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்தார்.
நீட் தேர்வை ரத்து செய்து பழையபடி 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். நீட் மதிப்பெண் குளறுபடிகள் வெளிவருவதாக எழும் மாணவர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பயனற்ற நீட் நுழைவுத் தேர்வுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராகுல் காந்தி உறுதி
நீட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கான மாணவர்ளின் குரலாய் ஒலிப்பேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்தார்.
இந்த நிலையில், நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளைக் கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் பங்கு பெற உள்ளார்.