மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், விரைவில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் லாகின் விவரங்களை உள்ளிட்டு, ஹால் டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்யலாம். இந்த நிலையில், தேர்வு மையங்களில் தேர்வர்கள் என்ன செய்யலாம், கூடாது என்று விரிவாகப் பார்க்கலாம்.
3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு.. அதாவது 200 நிமிடங்களுக்கு நீட் தேர்வு நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறும் தேர்வுக்கு, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மே 5ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஜூன் 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த நிலையில், தேர்வு மையங்களில் தேர்வர்கள் என்ன செய்யலாம், கூடாது என்று விரிவாகப் பார்க்கலாம்.
* தேர்வர்கள், சரியான நேரத்துக்குத் தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும்.
* தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாக, அதாவது மதியம் 12 மணிக்கு தேர்வு மையங்கள் திறக்கப்பட்டு, செயல்படும்.
* பகல் 1.30 மணிக்குப் பிறகு தேர்வு மையத்துக்குள் வர, தேர்வர்களுக்கு அனுமதி இல்லை.
* ட்ராஃபிக், தேர்வு மையத்தின் தூரம், வானிலை சூழல் ஆகியவற்றை முன்கூட்டியே கருத்தில்கொண்டு, வீட்டில் இருந்து தேர்வர்கள் கிளம்புவதை உறுதிசெய்ய வேண்டும்.
* தேர்வு மையம் திறக்கப்பட்ட உடனேயே, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தேர்வர்கள் சென்று அமர வேண்டும்.
அனுமதிச் சீட்டைக் காட்டிய பிறகே...
* தேர்வு மையத்தில் அனுமதிச் சீட்டைக் காட்டிய பிறகே தேர்வர்கள், தேர்வு அறைக்குள் செல்ல முடியும். செல்லக்கூடிய அனுமதிச் சீட்டு இல்லாத தேர்வர்கள், தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.
* ஒவ்வொரு தேர்வருக்கும் வரிசை எண்ணுடன் கூடிய இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு தேர்வரும் அதை சரியாக அறிந்தபிறகே சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று அமர முடியும்.
* தேர்வு நடைபெறும்போதே, மைய கண்காணிப்பாளர்கள் உங்களின் ஹால் டிக்கெட்டைப் பரிசோதிக்கலாம்.
* தேர்வு முடியும்வரை, தேர்வர்கள் தங்களின் இடத்தையோ, தேர்வு மையத்தையோ விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை.
* தேர்வர்கள் தங்கள் கையில் உள்ள ஓஎம்ஆர் தாளை, தேர்வு மைய அதிகாரியிடம் அளிக்காமல், தேர்வு மையத்தை விட்டு செல்லக்கூடாது.
தேர்வு குறித்த முழுமையான விவரங்களை அறிய: https://exams.nta.ac.in/NEET/images/neet-ug-2024-draft-ib-09022024.pdf என்ற தகவல் வழிகாட்டியைக் காணுங்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: https://neet.nta.nic.in/
தொடர்புகொள்ள- தொலைபேசி எண்: +91-11-40759000
மின்னஞ்சல் முகவரி: neet@nta.ac.in