அகில இந்திய இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 20ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.  மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் மாணவர் சேர்க்கை மையங்கள் மூலமாகவும் இதில் கலந்துகொள்ளலாம்.


நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை, மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மத்திய, மாநில இட ஒதுக்கீடுகளின் அடிப்படையில் சேர்க்கை தனித்தனியாக நடத்தப்படுகிறது. 


அனைத்து மாநிலங்களிலும் மாநிலக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களின் இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்கள் ஆகியவை மத்திய அரசால் நிரப்பப்படுகின்றன. மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குநர் அலுவலகம் மூலம் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.





ஜூலை 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல்




இந்நிலையில், அகில இந்திய இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 20ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 16ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ இடங்களில் சேர 40,193 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் மாணவர் சேர்க்கை மையங்கள் மூலமாகவும் இதில் கலந்துகொள்ளலாம்.


மாணவர்கள் https://cdnbbsr.s3waas.gov.in/s3e0f7a4d0ef9b84b83b693bbf3feb8e6e/uploads/2023/07/2023071446.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, கலந்தாய்வு தேதிகளை அறிந்துகொள்ளலாம்.


அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ், அரசு நிகர்நிலை, மத்தியப் பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் நிறுவனங்களில் சேர இதற்கு விண்ணப்பிக்கலாம். இதன்படி, ஜூலை 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பித்து, கட்டணத்தைச் செலுத்தலாம். 


ஜூலை 22 முதல் சாய்ஸ் ஃபில்லிங் எனப்படும் இடங்களைத் தேர்வு செய்யலாம். சாய்ஸ் ஃபில்லிங் மற்றும் இடங்களை இறுதி செய்ய ஜூலை 26ஆம் தேதி இறுதித் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதேபோல ஜூலை 29ஆம் தேதி கலந்தாய்வு முடிவுகள் அறிவிக்கப்படும். 


தேசிய மருத்துவ கலந்தாய்வுக் குழுவின் இணையதளத்தில் ஜூலை 30ஆம் தேதிக்குள் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜூலை 31 முதல் ஆக்ஸ்ட் 4ஆம் தேதி வரை மாணவர்கள் கல்லூரிகளில் சேரலாம். சேர்ந்த மாணவர்கள் குறித்த விவரங்களை மருத்துவக் கல்லூரிகள், ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் தெரிவிக்க வேண்டும் என்றும் மருத்துவ கலந்தாய்வுக் குழு தெரிவித்துள்ளது. 


அதேபோல இரண்டாம் கட்டக் கலந்தாய்வுத் தேதிகளும் ஸ்ட்ரே கலந்தாய்வுத் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை கீழே காணலாம்.