2026ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு - NEET UG 2026) குறித்த திருத்தி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் பயிற்சி மையங்கள், இந்த புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தங்கள் தேர்வுத் தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான nmc.org.in இல் பாடத்திட்டத்தை முழுமையாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பாடத்திட்ட விவரங்கள்
இயற்பியல் (Physics)
இயற்பியல் அளவீடுகள், இயக்கவியல் (Kinematics), இயக்க விதிகள், வேலை, ஆற்றல் மற்றும் திறன், சுழற்சி இயக்கம், புவி ஈர்ப்பு விசை, திட மற்றும் திரவங்களின் பண்புகள், வெப்ப இயக்கவியல், அலைவுகள் மற்றும் அலைகள், மின்னியல், காந்தவியல், மின்னோட்டம், ஒளியியல், அணுக்கள் மற்றும் கருக்கள் (Atoms and Nuclei) மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட தலைப்புகள் முக்கியமாக இடம்பெற்றுள்ளன.
வேதியியல் (Chemistry)
வேதியியலின் அடிப்படைக் கருத்துகள், அணு அமைப்பு, வேதியியல் பிணைப்பு, வெப்ப இயக்கவியல், சமநிலை, மின்வேதியியல், தனிமங்களின் வகைப்பாடு, P, d மற்றும் f தொகுதித் தனிமங்கள், கரிமச் சேர்மங்கள் (Organic Compounds), உயிர் மூலக்கூறுகள் (Biomolecules) மற்றும் செய்முறை வேதியியல் தொடர்பான கொள்கைகள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
உயிரியல் (Biology)
உயிரினங்களின் பன்முகத் தன்மை, தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கட்டமைப்பு, செல் அமைப்பு மற்றும் செயல்பாடு, தாவர உடலியல், மனித உடலியல் (Human Physiology), இனப்பெருக்கம், மரபியல் மற்றும் பரிணாமம், உயிரியல் மற்றும் மனித நலம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற தலைப்புகள் பாடத்திட்டத்தில் உள்ளன.
தேசிய மருத்துவ ஆணையம் பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, தேசியத் தேர்வுகள் முகமை (NTA) விரைவில் நீட் 2026 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் முழுமையான பாடத்திட்டத்தைச் சரிபார்த்து, இப்போதே தங்கள் பயிற்சியைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாணவர்களும் ஆசிரியர்களும் https://www.nmc.org.in/MCIRest/open/getDocument?path=/Documents/Public/Portal/LatestNews/Public%20Notice_NEET_removed.pdf என்ற இணைப்பில் புதிய பாடத்திட்டத்தை முழுமையாகக் காண முடியும்.