ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி மூலம் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய அளவில் லாபம் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயகன் திருவிழா
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “ஜனநாயகன். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் நரேன், பிரியாமணி, ரெபா மோனிகா ஜான், பிரகாஷ் ராஜ், டீஜே அருணாச்சலம், கௌதம் வாசுதேவ் மேனன் என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்த படமானது 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் விழா
இதனிடையே ஜனநாயகன் படத்தில் இருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மூன்றாம் பாடல் இன்று (டிசம்பர் 26) வெளியாகிறது. விவேக் எழுதியுள்ள இப்பாடலை விஜய் பாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. அங்குள்ள புக்கிட் கலீல் மைதானத்தில் நாளை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் தவெக தொண்டர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பங்கேற்கின்றனர்.
கோடிக்கணக்கில் கொட்டிய லாபம்
நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில் மொத்தம் 85,500 பேர் அமரலாம் என சொல்லப்படுகிறது. லெவல் 1, லெவல் 2, லெவல் 3 என மூன்று வகையான இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் லெவல் 3 இருக்கைகள் அடிப்படை விலை ரூ.2573க்கும், லெவல் 2 இருக்கைகள் ரூ. 4836க்கும், லெவல் 1 இருக்கைகள் ரூ.7,100க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்படியாக சுமார் ரூ.50 கோடிக்கும் மேல் டிக்கெட் விற்பனை உள்ளிட்ட இதர லாபம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
விளம்பர செலவு, மலேசிய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ஆகியவை போக தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தனியார் சுற்றுலா நிறுவனம் மலேசியா புறப்பாடு தொடங்கி திரும்பி ஊருக்கு வரும் வரையிலான பேக்கேஜை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.