NEET UG 2025 Registration: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்? தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்த விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

நீட் யுஜி 2025 தேர்வு:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளிலும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளிலும் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. அதாவது மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். தேசிய தேர்வு முகம இந்த தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் நீட் தேர்வை எழுத விரும்புவோர், விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் முடிவடைய உள்ளது. எனவே தகுதியான மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் கடைசி நேர சிக்கல்களை எதிர்கொள்வதை தவிர்க்க உடனடியாக, விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். 

Continues below advertisement

விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்:

தேர்வு எழுத விரும்பும் மாணவர்கல் விண்ணபிக்க சரியாக ஒருமாத காலம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இன்று இரவு 11.50 மணிக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் மூடப்படும். அதனைதொடர்ந்து, மார்ச் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை விண்ணப்பங்களை திருத்துவதற்கான அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு நிலையங்கள் குறித்து ஏப்ரல் 26ம் தேதி தகவல்கள் தெரிவிக்கப்படும். வரும் மே 1ம் தேதி மாணவர்களுக்கு தேர்வு அறை நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கப்படும். இறுதியாக மே 4ம் தேதியன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை ஒரே ஷிஃப்டாக நீட் தேர்வு நடத்தப்படும்.  இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு நிலையங்களில், ஆஃப்லைன் முறையில் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.

என்ன படிப்புகளுக்காக தேர்வு:

இந்தியாவில் MBBS, BDS, BUMS, BHMS, BAMS மற்றும் BYMS உள்ளிட்ட பல்வேறு இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு இந்த நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீட் யுஜி 2025 தேர்வு - விண்ணப்பிப்பது எப்படி?

படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in ஐ அணுகவும்

படி 2: முகப்புப் பக்கத்தில், 'NEET (UG)-2025 பதிவு மற்றும் ஆன்லைன் விண்ணப்பப் படிவம்' என்று எழுதப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 3: திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும்.

படி 4: உங்களைப் பதிவுசெய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பும் முறையை தொடரவும்.

படி 5: விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 6: எதிர்கால தேவைக்காக உங்கள் விண்ணப்பத்தின் நகலை பிரிண்ட் எடுக்கவும். 

தேர்வுக் கட்டணம்

பொது பிரிவினருக்கு – ரூ.1,700

பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர், ஓபிசி க்ரீமி லேயர் அல்லாதோர்- ரூ.1,600

எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ மூன்றாம் பாலினத்தவர் – ரூ.1000

வெளிநாட்டுத் தேர்வர்கள் – ரூ.9,500

யார் யார் விண்ணப்பிக்கலாம்?

  • 12ஆம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 50% மதிப்பெண்களைப் பெற்றிருப்பவர்கள்
  • விண்ணப்பிக்கும் தேர்வர்கள் மாணவர் சேர்க்கையின்போது 17வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  • அதே நேரத்தில் உச்ச வயது வரம்பு எதுவுமில்லை.
  • விண்ணப்பதாரர்கள் வேதியியல், இயற்பியல், உயிரியல்/ உயிர் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தனித்தனியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேவையான ஆவணங்கள் என்ன?

  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
  • சிறிய அஞ்சல் தலை அளவிலான புகைப்படம்
  • கையெழுத்து அடங்கிய புகைப்படம்
  • இடதுகை பெருவிரல் கைரேகை
  • 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று
  • சாதிச்சான்று

முழு விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2025/02/2025020754.pdf