இளங்கலை நீட் தேர்வுகளுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை தேசியத் தேர்வுகள் முகமை விரைவில் வெளியிட உள்ளது. இதைக் காண்பது எப்படி என்று காணலாம்.

Continues below advertisement

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயம் ஆகும். இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. பிற தேர்வுகளைப் போல அல்லாமல், நீட் தேர்வு ஆண்டுதோறும் ஒரு முறை, பேனா- காகித முறையில் ஒரே ஷிஃப்ட்டில் நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு 

இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 20.8 லட்சம் பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக இந்தியா முழுவதும் 5,453 தேர்வு மையங்களும் இந்தியாவுக்கு வெளியே 13 நீட் தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டன. சென்னையில் 44 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தமிழ்நாடு முழுவதும் 31 மாவட்டங்களில் 1.50 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

Continues below advertisement

மே 4ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. அன்று சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பரவலாகப் பெய்தது. குறிப்பாக சென்னையில் ஆவடி, பள்ளிக் கரணை, நுங்கம்பாக்கம்  உள்ளிட்ட பகுதியில் உள்ள நீட் தேர்வு மையங்களில், மழை காரணமாக மின் கசிவு ஏற்பட்டது.

சென்னை தேர்வு மையங்களில் மின் தடை

ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வு மையத்தில் பிற்பகல் 3 மணி முதல் 4.15 மணி வரை தேர்வு அறையில் மின் தடை ஏற்பட்டது. இதனால் அங்கு தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிப்புக்கு ஆளானதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டிய நிலையில், வழக்குத் தொடரப்பட்டது.

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட ஜூன் 2ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், தேர்வின் தற்காலிக விடைக் குறிப்புகளை வெளியிட தேசியத் தேர்வுகள் முகமை தயாராகி வருகிறது.  

ஆன்சர் கீயைப் பெறுவது எப்படி? (NEET UG 2025: Steps To Download Answer Key)

 நீட் தேர்வை எழுதிய தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

அதில் முகப்புப் பக்கத்தில் உள்ள "NEET (UG) 2025 Answer Key" என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

ஆன்சர் கீ பிடிஎஃப் ஆவணத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

அந்த ஆவணத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளவும், சரியாக விடைகளுடன் ஒப்பிட்டு பார்த்து, உங்களுடைய மதிப்பெண்களைக் கணக்கிட்டுக் கொள்ளவும்.

அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், ஆட்சேபிக்கவும் என்டிஏ வாய்ப்பு அளித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: neet.nta.nic.in