2025ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று (மே 4ஆம் தேதி) நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரை தேர்வு நடக்கிறது.

Continues below advertisement

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளிலும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்று இந்தத் தேர்வு அழைக்கப்படுகிறது

ஏற்கெனவே என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2025 (நீட் இளங்கலைத் தேர்வு) பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும் என்றும் ஒரே நாளில் ஒரே ஷிஃப்டில் இந்தத் தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் எப்படி?

இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதற்காக  5,453 தேர்வு மையங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவுக்கு வெளியே 13 இடங்களிலும் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 44 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 21,680 தேர்வர்கள் தேர்வை எழுத உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 31 மாவட்டங்களில் 1.50 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர்.

எதற்கெல்லாம் அனுமதி?

இதற்காக 11.30 மணி முதல் 1.30 மணிக்குள் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் உடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை, எந்த ஸ்டிக்கரும் ஒட்டப்படாத வாட்டர் பாட்டில்கள், உடல்நிலைப் பிரச்சினை தொடர்பான சான்றிதழ்கள் ஆகியவற்றை எடுத்துச்செல்ல மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

எதற்கெல்லாம் அனுமதி இல்லை?

  • மொபைல் போன்கள்
  • மின்னணு சாதனங்கள்
  • ஸ்மார்ட் பேனாக்கள்
  • ப்ளூடூத், பென் டிரைவ்கள்
  • கால்குலேட்டர்கள்
  • பேப்பர் நோட்ஸ்
  • உணவு
  • நகைகள்
  • கடிகாரங்கள்
  • கண்ணாடி
  • பர்சுகள்
  • கேமராக்கள்

கேள்வித் தாளில் முக்கிய மாற்றம்

இந்த ஆண்டு நீட் கேள்வித் தாளில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி, கொரோனா காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கூடுதல் நேரம் வழங்கலும் ஆப்ஷனல் கேள்வி முறையும், இந்த முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.