கருணை மதிப்பெண்களால் சர்ச்சை எழுந்ததை அடுத்து, 2024 இளநிலை நீட் தேர்வுக்கு மறுதேர்வு நடத்தப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் கலந்துகொண்ட யாருமே முழு மதிப்பெண்கள் பெறவில்லை.


2024ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஜூன் 14ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ஆம் தேதி இரவே, நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகின. இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் இடம் பெற்றனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


நீட் தேர்வின்போது ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு, சில மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகு கருணை மதிப்பெண்கள் வழங்கிய 1,563 பேருக்கு ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. அவர்களில் 816 பேர் மட்டுமே நீட் மறுதேர்வை எழுதி இருந்தனர்.


யாரெல்லாம் தேர்வு எழுதினர்?


சண்டிகரில் 2 தேர்வர்களில் ஒருவர் கூட மறு தேர்வை எழுதவில்லை. சத்தீஸ்கரில் 602 பேரில் 291 தேர்வர்கள் மட்டுமே மறு தேர்வை எழுதினர். குஜராத்தில் ஒரு தேர்வர் நீட் மறு தேர்வை எழுதி இருந்தார். ஹரியாணாவில் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த 494 தேர்வர்களில் 287 தேர்வர்களும் மேகாலயாவில் 234 தேர்வர்களும் நீட் மறு தேர்வை எழுதி இருந்தனர். இவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு நடைபெற்ற நிலையில், அண்மையில் விடைக் குறிப்புகள் வெளியாகின.


தொடர்ந்து இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.  முழு மதிப்பெண் பெற்ற 6 பேர் மறுதேர்வு எழுதலாம் என்று அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், 5 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். ஒரு மாணவர் எழுதவில்லை. இந்த 5 பேரும் 680 மதிப்பெண்கள் வரை மட்டுமே பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து மறுதேர்வில் முதலிடம் பெற்றோர் எண்ணிக்கை 61 ஆகக் குறைந்துள்ளது. பழைய மதிப்பெண் பட்டியலில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், தற்போது, முதலிடம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 61 ஆக குறைந்துள்ளது.


மறு தேர்வு எழுதிய மாணவர்கள் https://www.nta.ac.in/Download/Notice/Notice_20240630132856.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு விடைக் குறிப்பை அறிந்து கொண்டனர்.


தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?


* மாணவர்கள் https://neet.ntaonline.in/frontend/web/revised-scorecard/index என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


* விண்ணப்ப எண், பிறந்த தேதி, இ- மெயில் முகவரி அல்லது தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.


* சரியான தகவல்களை உள்ளிட்டு, நீட் மறு தேர்வு முடிவுகளை அறியலாம்.


https://exams.nta.ac.in/images/public-notice-dated-30-june-2024-declaration-of-revised-score-card.pdf என்ற இணைப்பில் மறு தேர்வு முடிவுகள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.