NEET UG 2024: இன்று நடைபெறும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வை எழுத, சுமார் 24 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இளநிலை நீட் நுழைவுத் தேர்வு:


2024ஆம் ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வானது, நாடு முழுவதும்  இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க  சுமார் 23.8 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 557 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 14 நகரங்களிலும் தேர்வு நடைபெற உள்ளது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து இன்று தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வர தேர்வு நடபெற உள்ளது. இதன் முடிவுகள் ஜுன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர் சேர்க்கை:


நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்ஸி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்திவருகிறது.


மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்:



  • மதியம்  2 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில், தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாக, அதாவது மதியம் 12 மணிக்கு தேர்வு மையங்கள் திறக்கப்பட்டு, தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பகல் 1.30 மணிக்குப் பிறகு தேர்வு மையத்திற்குள் வர, தேர்வர்களுக்கு அனுமதி இல்லை.

  • ஹால் டிக்கெட் இல்லாத தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதி இல்லை.

  • உங்களது அடையாள எண்ணுக்கு, எந்த தேர்வு அறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பு பலகை மூலம் கண்டறிந்து தேர்வு அறைக்கு செல்லவும்.

  • ஹால் டிக்கெட் உடன் அசல் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை கொண்டு செல்ல வேண்டும். அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அடையாள அட்டைகள் ( PAN card/Driving License/Voter ID/Passport/Aadhaar Card /Ration Card/ Class 12 Admit Card )

  • ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு செல்லுங்கள்

  • ஒரு போஸ் கார்டு அளவு புகைப்படம் ( இந்த புகைப்படமானது ஹால் டிக்கெட்டில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

  • தேர்வு தொடங்கியதையடுத்து, தேர்வு முடியும் வரை அறையில் இருந்து தேர்வர்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை.

  • தண்ணீர் பாட்டில்கள், டீ, காபி, குளிர்பானங்கள் அல்லது தின்பண்டங்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. ஆனால் நீரிழிவு நோயால்( சர்க்கரை நோயாளிகள் ) பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.இவர்கள் சர்க்கரை மாத்திரைகள்/பழங்கள் போன்ற உண்ணக்கூடிய உணவுகளை, முன்கூட்டியே அனுமதி பெற்று கொண்டு செல்லலாம்.

  • எந்த காரணத்தை கொண்டும், தேர்வு தேதியை தவிர , இதர நாட்களில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படாது

  • தேர்வு தொடங்குவதற்கு முன்னர், முக்கியமான விதிமுறைகள் தேர்வர்களுக்கு தேர்வு கண்காணிப்பு அதிகாரி தெரிவிப்பார்.

  • தேர்வு மையங்களில் மற்றும் அதன் அருகிலே புகைப்பிடித்தலுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

  • தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக படித்து பின்பற்றவும்.