மருத்துவக் கனவில் இருக்கும் மாணவர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நீட் தேர்வு நாளை மறுநாள் (மே 5) நடைபெற உள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை எழுத நாடு முழுவதிலும் இருந்து, 23.8 லட்சம் மாணவர்கள் விண்ணப்பத்து உள்ளனர். சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் பிரிவில் 24 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக 23,81,833 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முன்வந்துள்ளனர்.
இந்த நிலையில் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நேற்று (மே 2) வெளியிடப்பட்டது. தேர்வர்கள் https://neet.ntaonline.in/frontend/web/admitcard/indexindex என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.
தேர்வு மையத்தில் அனுமதிச் சீட்டைக் காட்டிய பிறகே தேர்வர்கள், தேர்வு அறைக்குள் செல்ல முடியும். செல்லக்கூடிய அனுமதிச் சீட்டு இல்லாத தேர்வர்கள், தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல தேர்வு நடைபெறும்போதே, மைய கண்காணிப்பாளர்கள் உங்களின் ஹால் டிக்கெட்டைப் பரிசோதிக்கலாம் என்பதால், ஹால் டிக்கெட்டை கவனமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
1.30 மணிக்குப் பிறகு அனுமதி இல்லை
தேர்வர்கள், சரியான நேரத்துக்குத் தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாக, அதாவது மதியம் 12 மணிக்கு தேர்வு மையங்கள் திறக்கப்பட்டு, செயல்படும். பகல் 1.30 மணிக்குப் பிறகு தேர்வு மையத்துக்குள் வர, தேர்வர்களுக்கு அனுமதி இல்லை.
இந்த நிலையில் தேர்வு மையத்தில் என்னவெல்லாம் செய்யலாம், கூடாது என்று பார்க்கலாம்.
என்ன செய்யலாம்?
- வாய்ப்பிருந்தால், நீட் தேர்வு மையத்துக்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே நேரில் சென்று பாருங்கள், இது தேர்வு நாளைய பயணத்தை எளிதாக்கும்.
- நீட் தேர்வுக்கான உடை கட்டுப்பாட்டை சரியாகப் பின்பற்றுங்கள். இது தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கும்.
- தேர்வின்போது நேரத்தை அடிக்கடி கவனித்துக்கொண்டே இருங்கள். இல்லாவிட்டால், ஏதேனும் ஒரு பிரிவு கேள்விக்கு அதிக நேரத்தைச் செலவிட்டிருப்பீர்கள்.
- ஓஎம்ஆர் தாளில் சரியான விடைகளை கவனமாகப் பூர்த்தி செய்யுங்கள்.
- நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுதி முடித்து விடுங்கள். சந்தேகம் இருக்கும் கேள்விகளைக் கடைசியாக எழுதலாம்.
என்ன செய்யக் கூடாது?
- ஹால் டிக்கெட்டில் கையெழுத்து இடக்கூடாது. எதையும் எழுதி விடாதீர்கள்.
- ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள, தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் எதையும் எடுத்து வராதீர்கள்.
- தேர்வு அறையில் அமர்ந்திருக்கும்போது பிற மாணவர்களுடன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
- உங்களுக்கு ஒதுக்கப்படாத இடங்களில் அமரக் கூடாது.
- தெரியாத கேள்விகளுக்கு பதிலளிக்க நீண்ட நேரம் யோசித்து, நேரத்தை வீணடிக்க வேண்டாம். அந்தக் கேள்வியை விட்டுவிட்டு, பிற கேள்விகளுக்கு பதிலளியுங்கள் நேரமிருந்தால் அந்த கேள்விக்கு கடைசியாக யோசித்து பதில் எழுதலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://neet.nta.nic.in/