இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கூடுதல் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் நள்ளிரவு 11:30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
 
நீட் தேர்வு 


நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.  


இதில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் மட்டுமே, மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள் ஆவர். நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, கலந்தாய்வில் உரிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும். 


மே 7-ல் 2023 நீட் தேர்வு


2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. 499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.


இதற்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 6ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நிறைவடைந்து, ஏப்ரல் 6ஆம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தேசியத் தேர்வுகள் முகமை மீண்டும் விண்ணப்ப அவகாசத்தை நீட்டித்தது. இதன்படி, நீட் தேர்வை எழுத மாணவர்கள் மீண்டும் ஏப்ரல் 11 முதல் விண்ணப்பித்து வருகின்றனர். இதன்படி இன்று (13ஆம் தேதி) இரவு 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம். இரவு 11.59 வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.  


மாணவர்கள் https://examinationservices.nic.in/Neet2023/Root/home.aspx?enc=WPJ5WSCVWOMNiXoyyomJgATm16WDSuAdfwpi7ZXy4cMliAQFLpMF1gZtEIwQ/2bk என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


புதிதாக விண்ணப்பிப்போர் https://examinationservices.nic.in/Neet2023/Registration/Instruction.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்து, வழிமுறைகளைப் படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 


மாணவர் சேர்க்கை


நாடு முழுவதும் உள்ள 645 மருத்துவக் கல்லூரிகள், 318 பல் மருத்துவக் கல்லூரிகள், 914 ஆயுஷ் கல்லூரிகள், 47 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், நீட் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. மாநிலக் கல்லூரிகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் 100 சதவீத ஒதுக்கீட்டுக்கும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள மாநிலக் கல்லூரி இடங்கள், சொந்த மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. 


கூடுதல் விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2023/04/2023041076.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும். 


தொலைபேசி எண்: 011- 40759000 
இ- மெயில்: neet@nta.ac.in