2023ஆம் ஆண்டுக்கான நீட் இளங்கலைத் தேர்வுக்கு மொத்தமாக 20,87,445 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.57 லட்சம் பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ள நிலையில், இதுவே கடந்தகால வரலாற்றில் அதிகமான எண்ணிக்கையாகும். 


தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். 


இதில், மாணவிகளே அதிகம் ஆகும். 20.8 லட்சம் பேரில் 11.8 லட்சம் பேர் மாணவிகள் ஆகும். மாணவர்கள் சுமார் 9 லட்சம் பேர் இளங்கலை நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 11.5 சதவீதம் ஆகும். நுழைவுச் சீட்டு, தேர்வு மையங்கள் உள்ளிட்ட தகவல்களை, நீட் தேர்வை நடத்தும் என்.டி.ஏ. விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மாநில வாரியான புள்ளிவிவரங்கள் 


நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 2.77 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தில் 2.73 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 


இவை தவிர்த்து ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பிஹார், மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.பிற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது. 


சாதி வாரியாக விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை


நீட் தேர்வுக்கு அதிகபட்சமாக ஓ.பி.சி. பிரிவில் 8.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்தபடியாக பொதுப் பிரிவில் 6 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். எஸ்.சி. பிரிவில் 3 லட்சம் மாணவர்களும், எஸ்.டி. பிரிவில் 1.3 லட்சம் மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் இருந்து 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்திருக்கின்றனர். 


நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, 2020 மற்றும் 21ஆம் ஆண்டைப் போல நீட் தேர்வு நடத்தப்படும் என்று  என்.டி.ஏ. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீட் தேர்வு 


நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.  


மே 7-ல் 2023 நீட் தேர்வு


2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. 499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.