இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு நேற்று இரவு முதல் தொடங்கியுள்ளது. எல்லாப் பிரிவினருக்கும் கட்டணம் திடீரென 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 

Continues below advertisement

எம்பிபிஎஸ், பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - National Eligibility cum Entrance Test) என அழைக்கப்படுகிறது. 

நாடு முழுவதும் உள்ள 645 மருத்துவக் கல்லூரிகள், 318 பல் மருத்துவக் கல்லூரிகள், 914 ஆயுஷ் கல்லூரிகள், 47 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், நீட் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. இந்தத் தேர்வை எழுதுவோர் மட்டுமே இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர முடியும். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. 

Continues below advertisement

ஏப்ரல் 6ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 5.20 வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று (மார்ச் 6) இரவு முதல் தொடங்கி உள்ளது. ஆன்லைன் வழியாக மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். ஏப்ரல் 6ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் உயர்வு

இதற்கிடையே தேர்வுகளை நடத்தும் என்டிஏ மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதன்படி பொதுப் பிரிவினருக்கு ரூ.1600 ஆக இருந்த விண்ணப்பக் கட்டணம், 2023-ம் ஆண்டில் ரூ.1700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் மற்றும் க்ரீமி லேயர் அல்லாத ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500 ஆக இருந்த விண்ணப்பக் கட்டணம், ரூ.1600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல எஸ்சி/ எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு ரூ.900 ஆக இருந்த விண்ணப்பக் கட்டணம், ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவுக்கு வெளியே மாணவர்கள் தேர்வு எழுத ரூ.9,500 செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். 

இட ஒதுக்கீடு எப்படி?

மாநிலக் கல்லூரிகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் 100 சதவீத ஒதுக்கீட்டுக்கும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள மாநிலக் கல்லூரி இடங்கள், சொந்த மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. 2022ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 543 நகரங்களில் அமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 

கூடுதல் விவரங்களுக்கு: https://nta.ac.in/Download/Notice/Notice_20230306220519.pdf