இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (மே 20-ம் தேதி) கடைசித் தேதி ஆகும்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த முறை ஜூலை 17ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்களுக்கு 3 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த சூழலில் இன்று (மே 20-ம் தேதி) இரவு 9 மணி வரை https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி விதிகளை உறுதி செய்வதற்காக, தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி, 543 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நடைபெறுகிறது.
விண்ணப்பக் கட்டணம் என்ன?
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு பொதுப்பிரிவு மாணவரும் ரூ.1,600 செலுத்த வேண்டியது கட்டாயம். ஓபிசி பிரிவினருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் ரூ.1,500 கட்டணம் ஆகும். எஸ்சி/ எஸ்டி பிரிவு மாணவர்கள் ரூ.900 செலுத்த வேண்டியது அவசியம். இந்தியாவுக்கு வெளியே உள்ள தேர்வு மையங்களில் எழுத விரும்பும் மாணவர்களுக்கு ரூ.3,000 கட்டணமாக உள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
* www.nta.ac.in என்ற இணையதளப் பக்கத்துக்குச் செல்லவும்.
* Registrations for NEET UG 2022 என்ற பக்கத்தை க்ளிக் செய்யவும்
* உங்களின் தகவல்களை உள்ளிட்டு, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
* தேவையான அனைத்துத் தகவல்களையும் பதிவேற்றி, கட்டணத்தைச் செலுத்தவும்.
* விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பிரின்ட்அவுட் எடுக்கவும்.
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், www.nta.ac.in மற்றும் https://neet.nta.nic.in என்ற இணையதளங்களைப் பார்க்கலாம்.
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணையும், neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்