எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. தேசிய தேர்வு முகமைகள் சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் நடத்தப்படடு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி நடத்தப்பட்டது.
இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 1-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத காரணத்தால் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், 2021ம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ந் தேதி கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றப்படும். இதற்கான விண்ணப்பப்திவு நாளை (ஜூலை 13ந் தேதி) நாளை இணையதளத்தின் மூலமாக தொடங்கும் என்று அறிவித்திருந்தார்.
மத்திய கல்வி அமைச்சரின் அறிவிப்பின்படி நீட் தேர்வில் பங்கேற்பதற்காக https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தின் மூலமாக இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம். கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நிர்வாகமும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. இந்த சூழலில், மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் 12-ந் தேதி நடைபெற உள்ளது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வகள் நடத்தப்படாத காரணத்தாலும், கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் கடந்த மாதம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பேட்டி அளித்தபோது நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் சட்டப்போராட்டம் தொடரும் என்றும், அதே சமயத்தில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் கூறினார்.
மத்திய கல்வி அமைச்சரின் நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் முன்னர், செப்டம்பர் 5-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், பேனா மற்றும் காகித முறையில் இந்த தேர்வுகள் நடத்தப்படும் என்றும், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. ஆனால், இந்த தகவல்களுக்கு தேசிய தேர்வுகள் முகமை மறுப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ள சூழலில், நீட் தேர்விற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.