இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல யுஜிசி நெட் தேர்வும் ரத்து செய்யப்பட்டது. நீட் முதுகலைத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இது இந்தியா முழுக்க கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து நீட் தேர்வு, யுஜிசி நெட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமையின் தலைவர் நீக்கப்பட்டு, புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மக்களவை, மாநிலங்களவையிலும் இதுதொடர்பாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
உயர்மட்டக் குழு அமைப்பு
நீட் தேர்வை வெளிப்படையாக, நம்பகத் தன்மையுடன் நடத்துவதை உறுதி செய்வது தொடர்பாக மத்திய அரசு உயர் மட்டக் குழு அமைத்தது. இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதா கிருஷ்ணன் தலைமையில் மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் அரசு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இந்தக் குழு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்துக் கோரியுள்ளது.
என்னென்ன கூறலாம்?
- தேர்வு முறையில் சீர்திருத்தம்
- தகவல் பாதுகாப்பு வழிமுறைகளில் மேம்பாடு
- தேசியத் தேர்வுகள் முகமையின் (NTA) கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
ஆகியவை குறித்து வரும் ஜூலை 7ஆம் தேதி வரை மாணவர்கள், பெற்றோர்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளைக் கூறலாம்
https //innovateindia.mygov.in/examination-reforms-nta என்ற இணைய தளத்தில் பரிந்துரைகளைத் தெரிவிக்கலாம்.
கருத்துகளைச் சமர்ப்பிப்பது எப்படி?
https://auth.mygov.in/user/login?destination=oauth2/authorize என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். இ- மெயில் முகவரி, பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு, கருத்துகளைச் சமர்ப்பிக்கலாம்.