நீட் முதுகலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை வரும் 12ம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  


 


 






 


அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) எனப்படும் ஒரே சீரான நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 2017ல் இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.  நடப்பாண்டுக்கான முதகலை நீட் மருத்துவ தேர்வு செப்டம்பர் 11, 2011 அன்று நடத்தியது. மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அக்டோபர், 9  2021 அன்று வெளியானது. இதில், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் முதுகலை மாணவர்கள் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். நாடு முழுவதிலும் உள்ள 6,000க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகளில் உள்ள முதுகலை மருத்துவ இடங்களுக்கு நீட் தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 


மொத்த சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீடு திட்டத்தின் மூலம் 50% இடங்களை மத்திய அரசு நிரப்பும் .  இந்த, அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ/ பல் மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு முன்னதாக அறிவித்தது. இதற்கு, எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், முதுகலை மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதர 50% இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசு நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, இந்தியா முழுவதுமுள்ள ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு முதுகலை மருத்துவ படிப்பில் 27% இடஒதுக்கீடு செல்லும் எனவும், முதுகலை மருத்துவ சேர்கையில்  பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க பறிந்துரை செய்த  பாண்டே கமிட்டி அறிக்கை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது எனவும்  உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.