நீட் முதுகலைத் தேர்வு நடைபெறும் விதம், கலந்துகொள்ளும் தேர்வர்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் அடங்கிய சுற்றறிக்கை லீக்கானதை அடுத்து, தேர்வை எழுதும் மருத்துவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.


நாடு முழுவதும் நுழைவுத் தேர்வுகளும் அதில் நடைபெறுவதாக எழும் முறைகேடு புகார்களுமே அதிகம் பேசுபொருளாக மாறியுள்ளன. இந்த நிலையில், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்டி (Doctor of Medicine), எம்எஸ் (Master of Surgery) மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுகலைத் தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. 


பலகட்டத் தாமதம், மாற்றங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 11ஆம் தேதி நீட் முதுகலைத் தேர்வு நடைபெற உள்ளது. இவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆக.8ஆம் தேதி வெளியாக உள்ளது. தேர்வு மைய ஒதுக்கீடு விவரம் ஜூலை 31ஆம் தேதி வெளியான நிலையில், அதில் வெளி மாநிலங்களில் தேர்வர்களுக்கு மையங்கள் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக எம்.பி.க்கள் தலையீட்டுக்குப் பிறகு, பெரும்பாலும் சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


2 ஷிஃப்டுகளில் நீட் தேர்வு


இந்த நிலையில், அனைத்து வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் சங்கம் ஒரு சுற்றறிக்கையை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி ’’ஆகஸ்ட் 11ஆம் தேதி இரண்டு ஷிஃப்டுகளாக நீட் முதுகலைத் தேர்வு நடைபெற உள்ளது. காலை 9 முதல் 12.30 மணி வரை முதல் ஷிஃப்ட்டும், 3.30 மணி முதல் 7 மணி வரை 2ஆவது ஷிஃப்ட்டும் நடைபெற உள்ளன. தேர்வுக்கு 2 மணி நேரம் முன்னதாக, குறிப்பாக முதல் ஷிஃப்ட் மாணவர்கள் காலை 7 மணிக்கும் மதிய ஷிஃப்ட் மாணவர்கள் மதியம் 1.30 மணிக்கும் தேர்வு மையத்துக்கு வர வேண்டும்.






அதிக எண்ணிக்கையிலான மருத்துவ மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்முறையில் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நீட் முதுகலைத் தேர்வின் முக்கியமான தன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்காகத் தேர்வை பாதுகாப்பாக மற்றும் தடையின்றி நடத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2.28 லட்சம் பேர் எழுதும் தேர்வு


169 நகரங்களில் 376 தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வை, 2,28,542 தேர்வர்கள் எழுத உள்ளனர். கணினி முறையில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.


இந்த விவரங்கள் அனைத்தும் லீக் ஆகியுள்ள சூழலில், தேர்வு முறை, வினாத்தாள் ஆகியவற்றின் விவரங்களும் கசியாது என்று என்ன நிச்சயம் என அனைத்து வெளிநாட்டு மருத்துப் பட்டதாரிகள் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.