என்பிஇஎம்எஸ் எனப்படும் மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வு வாரியம், ஆண்டுதோறும் நீட் முதுகலைத் தேர்வை நடத்துகிறது. நீட் முதுகலைத் தேர்வை இரண்டு கட்டமாக நடத்த வாரியம் திட்டமிட்டிருந்த நிலையில், தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ஒரே ஷிஃப்ட்டில் தேர்வை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Continues below advertisement

இதனால் தேர்வு மையங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல நீட் தேர்வு நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.  ஜூன் 15ஆம் தேதி நீட் முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. 2,42, 678 தேர்வர்கள் நீட் முதுகலைத் தேர்வை எழுத உள்ளனர். இதற்கிடையே, இரண்டு ஷிஃப்டுகளாகத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 

சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

இதை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு விசாரித்தது. நீதிபதிகள், ஒரே ஷிஃப்ட்டில் தேர்வை நடத்தப் பணித்தனர். தொடர்ந்து பேசிய அவர்கள், ‘’இரண்டு விதமான கேள்வித் தாள்கள் ஒரே மாதிரியான அறிவுத் தரத்தில் எப்படி இருக்கும்? 

Continues below advertisement

அபூர்வமான தருணங்களில் நார்மலைசேஷன் முறையை அமல்படுத்தலாம். ஆனால், ஆண்டுதோறும் நடைபெறும் தேர்வுக்கு இந்த முறையைக் கொண்டு வரக்கூடாது. 

தன்னிச்சையான தன்மையை உருவாக்குகிறது

ஒரே ஷிஃப்ட்டில் தேர்வை நடத்த மருத்துவ வாரியம் போதிய தேர்வு மையங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? இரண்டு ஷிஃப்ட்டுகளில் தேர்வை நடத்துவது தன்னிச்சையான தன்மையை உருவாக்குகிறது. அதேபோல தேர்வர்களுக்கு ஒரே மாதிரியான தரத்தில் கேள்வித் தாள்கள் இருக்காது’’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதனால், ஒரே ஷிஃப்ட்டில் தேர்வை நடத்த வேண்டிய கட்டாயம் மருத்துவ வாரியத்துக்கு ஏற்பட்டுள்ளது. போதிய தேர்வு மையங்கள் தற்போது இல்லை என்பதால், பாதுகாப்பான மையங்களைக் கண்டறிய வேண்டிய தேவை மருத்துவ வாரியத்துக்கு உருவாகி உள்ளது. இதற்கு, டிசிஎஸ் மாதிரியான வெளி நிறுவன முகமைகளை வாரியம் அணுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கூடுதல் தகவல்களுக்கு: https://natboard.edu.in/viewnbeexam?exam=neetpg என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.