அண்ணா பல்கலை. வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை அறிவிப்பு: 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, 90,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: 

கோடை விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த வகுப்பிற்கு செல்லும் பயம் கலந்த சந்தோஷம், நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சி என பல உணர்வுகளுடன் மாணவர்கள் சங்கமித்துள்ளனர்.

விஜயை மறைமுகமாக விமர்சித்த ஸ்டாலின்:

மதுரையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார். புதியதாக சிலர் நாங்கள்தான் மாற்று என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள் என்றும், அவர்களுக்கு நாம் பதிலடி தர வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

அறிவுசார் நகரம்

திருவள்ளூர், ஊத்துக்கோட்டை அருகில் 870 ஏக்கரில் அறிவுசார் நகரம் அமைய உள்ளது. முதல் கட்டமாக 416.25 ஏக்கரில் அறிவு நகரத்துக்கான உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள டிட்கோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.3 கட்டமாக மேற்கொள்ளப்பட உள்ள இந்த அறிவுசார் நகரில் கல்லூரி, குடியிருப்பு, மருத்து, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகங்கள், மாணவர் குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளன.

சாதியை அழிக்க முடியாது - மகாராஷ்டிரா முதலமைச்சர் கருத்து

"சாதி அமைப்பு இருக்கக் கூடாது என அடிக்கடி சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் சாதி மறைந்துவிடாது. எனவே, சாதி அடிப்படையிலான பாகுபாடு இருக்கக்கூடாது என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்" என பிராமணர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

ரஷியாவில் இறங்கி அடித்த உக்ரைன் ட்ரோன்கள்:

ரஷ்யாவின் எல்லைக்குள் மிக ஆழமாக புகுந்து ட்ரோன் தாக்குதல் நடத்தி, 40-க்கும் அதிகமான போர் விமானங்களை சேதப்படுத்தி உள்ளது உக்ரைன். போர் தொடங்கியதில் இருந்து அதிக சேதத்தை ஏற்படுத்திய உக்ரைனின் ட்ரோன் தாக்குதலாக இது இருக்கும் என அந்நாடு தெரிவித்துள்ளது.

தங்கம் விலை உயர்வு:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.71,600க்கு விற்பனையாகி வருகிறது. 

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்:

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற, மதயானை கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் விக்ரம் சுகுமாரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மரணம் அடைந்துள்ளார்.  

மும்பையை பந்தாடிய பஞ்சாப்:

நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்களூருவை, எதிர்கொள்ளப்போவது யார் என்பதை உறுதி செய்யும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 203 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ருத்ரதாண்டவமாட, 19 ஓவர்கள் முடிவிலேயே இலக்கை எட்டி இரண்டாவது முறையாக அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதன்படி, நாளை நடைபெற உள்ள நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்:

செஸ் வரலாற்றில் மறக்கமுடியாத வரலாற்று நிகழ்வு ஒன்றை, தமிழ்நாட்டைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியனான குகேஷ் நிகழ்த்தியுள்ளார். நார்வே செஸ் 2025 போட்டியின் 6வது சுற்றில் முன்னாள் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை எதிர்கொண்ட குகேஷ், அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசமாக்கினார்.