முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஆக.9) தள்ளுபடி செய்துள்ளது.


நீட் முதுகலைத் தேர்வை எழுத மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அருகிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டியும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 


மனுவை விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் அனாஸ் தன்வீர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைத்தார். கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்ட நிலையில், இன்று (ஆக.9) இந்த மனு விசாரணைக்கு வந்தது. 


எனினும் இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறும்போது, ‘தற்போதைய சூழலில் தேர்வை ஒத்தி வைப்பது என்பது முடியாத ஒன்று. எதற்காகத் தேர்வை கடைசி நேரத்தில் தள்ளி வைக்கக் கோருகிறீர்கள்? கடைசி நேரத்தில் தேர்வை எப்படித் தள்ளிவைக்க முடியும்? புதிய கல்விக் கொள்கையை நாங்கள் திட்டமிட முடியாது. 






ஒருசில மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியதால், 2 லட்சம் மாணவர்களை சிக்கலில் தள்ள முடியாது’’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு


நாடு முழுவதும் நீட், நெட், க்யூட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு, ஆள்மாறாட்டப் புகார்கள் வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் நெட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, மீண்டும் நடத்தப்பட்டது. நீட் இளங்கலைத் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின.


இந்த நிலையில் நீட் முதுகலைத் தேர்விலும் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. தேர்வு மையங்கள் ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் அமைப்பு, தேர்வு விவரங்கள், வினாத்தாள்கள் கசிந்ததாகத் தகவல், தேர்வைத் தள்ளி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தின் மனு என சர்ச்சைகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.