70 ஆயிரம் ரூபாய்க்கு சில டெலிகிராம் சேனல்களில் நீட் முதுகலைத் தேர்வு வினாத்தாள் லீக் ஆனதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், அதில் உண்மையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


பலகட்ட தாமதத்துக்குப் பிறகு நீட் முதுகலைத் தேர்வு


இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்டி (Doctor of Medicine), எம்எஸ் (Master of Surgery) மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுகலைத் தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை நீட் முதுகலைத் தேர்வு மூலமாகவே நடத்தப்படுகிறது. தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் இந்தத் தேர்வை நடத்துகிறது.


இதற்கிடையே நீட் முதுகலைத் தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, ஜூன் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து தேர்வுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக ஜூன் 22ஆம் தேதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிற நுழைவுத் தேர்வுகளில் கண்டறியப்பட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக, நீட் முதுகலைத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது.


வினாத் தாள்கள் லீக்?


முறைகேடுகளைத் தடுக்க முதல் முறையாக 2 ஷிஃப்ட்டுகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே நீட் முதுகலைத் தேர்வு ஷிஃப்டு விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து நீட் முதுகலை வினாத்தாள்கள் வெளியாகி உள்ளதாக புதிய சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக வாட்ஸ் அப், டெலிகிராம் பக்கங்களில் எடுக்கப்பட்ட ஸ்க்ரீன் ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன. எனினும் சிலர் இதுகுறித்து சைபர் கிரைம் மற்றும் இண்டெலிஜென்ஸ் பீரோ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


நீட் முதுகலைத் தேர்வு வினாத்தாள் தயார் செய்யப்படவே இல்லை


இந்தத் தகவலுக்கு தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ’’இந்த விவகாரம் குறித்து நாங்கள் ஏற்கெனவே காவல்துறையில் வழக்குப் பதிவு செய்துள்ளோம். குறிப்பிட்ட அளவில் பணத்தை வாங்கிக் கொண்டு, நீட் முதுகலைத் தேர்வு வினாத்தாள்களை அளிப்பதாக சில ஏமாற்றுக்காரர்கள் நீட் தேர்வர்களை ஏமாற்றி வருகின்றனர். ஆனால் அதில் துளி அளவும் உண்மையில்லை.


இதுவரை நீட் முதுகலைத் தேர்வு வினாத்தாள் தயார் செய்யப்படவே இல்லை. இதுபோன்ற தகவல்களை உறுதி செய்யாமல், அனுப்பினாலோ, பகிர்ந்தாலோ உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


உள்ளூர் காவல் நிலையத்தை அணுகுங்கள்


ஒருவேளை தேர்வர்கள், ஏமாற்றும் வகையிலான இ- மெயில்கள், குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புகள் அல்லது ஆவணங்கள் மூலம் நேரடியாகவோ அல்லது சமூக ஊடகங்கள் வழியாகவோ அழைப்பு வந்தால் எங்களுக்குத் தெரிவியுங்கள். அல்லது, உடனடி விசாரணைக்கு உள்ளூர் காவல் நிலையத்தை அணுகுங்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக நீட் இளநிலைத் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகவும் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது நினைவுகூரத்தக்கது.