மார்ச் 5ல் தேர்வு


இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. இளநிலை நீட் தேர்வு முடிந்து தற்போது மருத்துவ கல்லூரியில் சேர மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.


அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை என்.பி.இ. எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது.  இந்நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான முதுகலை நீட் மருத்துவத் தேர்வு மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.


இதற்கிடையே தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், திட்டமிட்ட தேதியில் நீட் முதுநிலைத் தேர்வு நடைபெறும் என்று  சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்


இந்தாண்டுக்கான முதுநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 9ம் தேதி தொடங்கியது.  பிப்ரவரி 9ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கிய விண்ணப்பப்பதிவு இன்று இரவு 11.55 மணிக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதhttps://nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும், பிப்ரவரி 15ஆம் தேதி முதல் திருத்தங்கள் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். பின்னர் பிப்ரவரி 18 முதல் 20ஆம் தேதி வரை மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எப்படி விண்ணப்பிப்பது?



  • முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு https://nbe.edu.in/ செல்ல வேண்டும் 

  • National Board Of Examination In mediacl Science என்ற முகப்பு பக்கம் தோன்றும்.

  • அதில் NEET PG என்பதை கிளிக் செய்து, application link என்று இருப்பதை கிளிக் செய்ய  வேண்டும்.

  • பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.


கட்டணம்


பொது, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) மற்றும் பொருளாதாராத்தில் நலிவடைந்த(EWS) பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.4,250 செலுத்த வேண்டும். மேலும், எஸ்டி, எஸ்சி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PwD) பதிவுக் கட்டணமாக 3,250 ரூபாய் செலுத்த வேண்டும்.


ஒட்டுமொத்த முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டுத் திட்டத்தின் மூலம் 50% இடங்களை மத்திய அரசு நிரப்பும்.  இந்த, அகில இந்திய ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ், மருத்துவ/ பல் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு முன்னதாக அறிவித்தது. மீதமுள்ள 50% இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசு நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.