நாடு முழுவதிலும் உள்ள 6,000-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுகலை மருத்துவ இடங்களுக்கான தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2022-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு ( NEET - PG) வரும் மார்ச் மாதம் நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு இன்று (ஜனவரி 15) முதல் விண்ணப்பிக்கலாம்.
அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை என்பிஇ எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது. 2021ஆம் ஆண்டுக்கான முதுகலை நீட் மருத்துவத் தேர்வு, கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது.
மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அக்டோபர் 9 அன்று வெளியானது. இதில், குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்களைப் பெற்றவர்கள் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். அதன்படி அண்மையில் கலந்தாய்வு தொடங்கியது.
இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு ( NEET - PG), வரும் மார்ச் மாதம் 12ஆம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு இன்று (ஜனவரி 15) முதல் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 4-ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற உள்ளது.
மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத https://nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 12-ல் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வு முடிவுகள் மார்ச் 31ஆம் தேதி வெளியாக உள்ளன.
ஒட்டுமொத்த முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டுத் திட்டத்தின் மூலம் 50% இடங்களை மத்திய அரசு நிரப்பும். இந்த, அகில இந்திய ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ், மருத்துவ/ பல் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு முன்னதாக அறிவித்தது. மீதமுள்ள 50% இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசு நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: https://nbe.edu.in
தொலைபேசி எண்: 022- 61087595
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்