பொதுமருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான முதுகலை நீட் தேர்வு 2021ல் இடஒதுக்கீட்டு திருத்தத்தை தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது.  வருடாந்திரை முதுநிலை நீட் தேர்வுகளை தேசியத் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. அண்மையில் முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதிகளை இந்த வாரியம் அறிவித்திருந்தது. இதன்படி வருகின்ற 11 செப்டம்பர் 2021ம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வுகள் நடைபெறும் எனச் சொல்லப்பட்டது. 


இதற்கிடையேதான்  மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டை அறிவித்தது மத்திய அரசு. அது நடைபெறும் கல்வியாண்டிலேயே அமலுக்கு வரவிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதற்கடுத்துதான் தற்போது தேசியத் தேர்வுகள் வாரியம் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இடஒதுக்கீட்டில் திருத்தம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.


முன்னதாக இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு 18 ஏப்ரல் 2021 அன்று நடைபெறும் எனச் சொல்லப்பட்டது. பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வு தேதி தள்ளிவைக்கப்பட்டது. 


இதையடுத்து தேசிய தேர்வுகள் ஆணையம் 12 செப்டம்பர் 2021ல் இளநிலை மருத்துவ நீட் தகுதித் தேர்வுகளும் 11 செப்டம்பர் 2021ல் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வுகளும்  நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.



இதற்கான விண்ணப்பத்தை ஆணையத்தின் அதிகாரபூர்வ தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது  இடஒதுக்கீடு அமலுக்கு வந்துள்ள நிலையில் 27 சதவிகித இடஒதுக்கீட்டுக்குள் வரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்குள் வரும் பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய பிரிவினரும் நீட் தேர்வு விண்ணப்பத்தில் தற்போது திருத்தம் செய்துகொள்ளலாம். இடஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய விரும்புபவர்கள் இதற்கு வருகின்ற 16-20 ஆகஸ்ட் 2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசின் தேர்வு வாரியத்தின் இணையதளத்திற்கு இதை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம் என்ற தளத்தில் விண்ணப்பம் செய்யலாம்,


முன்னதாக இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு மதிப்பெண் B.Sc., Nursing பாடப்பிரிவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு காரணமாக, 2021 நீட் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. அதன்படி, ஆன்லைன் விண்ணப்பப் படிவங்கள், 2021, 10ஆகஸ்ட் மாலை 5 மணிவரையிலும் கட்டணம் செலுத்துவது இரவு 11.50 வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும். 


வேறு வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது என்பதால், இந்த வாய்ப்பினை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.  


நீட் (இளநிலை) தேர்வு 2021, 12 செப்டம்பர் 2021 அன்று நாடு முழுவதும் நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஜூலை 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.   இதுகுறித்து, தேசிய தேர்வு முகமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தங்களது சொந்த வழிமுறைகளைப் பின்பற்றி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மதிப்பெண் முடிவுகளை மத்திய/மாநில அரசு முகமைகள் பயன்டுத்திக் கொள்ளலாம்.  B.Sc Nursing Home பாடப்பிரிவுக்கும் கூட நீட் தேர்வு மதிப்பெண் முடிவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநர் முன்னதாக தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், நீட் தேர்வு முறையில் பங்கு கொள்ளும் கல்லூரிகளின் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என டெல்லி பல்கலைக்கழகத்திடம் இணைக்கப்பட்ட செவிலியர் கல்லூரி ஒன்று தேசிய தேர்வு முகமையை அணுகியுள்ளது. இதனடிப்படையில், நீட் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தது.