நீட் வினாத்தாள் தேர்வு நாளுக்கு முன்னதாகவே வெளியானதாக இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பீகார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த மே-5 ம் தேதி நாடு முழுவதும் 2024-ம் ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. பீகார் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கோச்சிங் மையத்தை சேர்ந்த மாணவர்கள் 4 பேர் ஒரே மதிப்பெண் எடுத்தது பேசு பொருளானது. சில மாநிலங்களில் நீட் தேர்வு நடப்பதற்குமுன்னதாகவே வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாடு முழுவதும் நடந்த முடிந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வலுத்து வருகிறது. குறிப்பிட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை, மதிப்பெண்களில் முரண்பாடு என குற்றாச்சாட்டு எழுந்துள்ளது. ஏனெனில், 1,500 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
நீட் தேர்வு ( National Eligibility-cum-Entrance Test (NEET)) வினாத்தாள் தேர்வு நாளுக்கு முன்னதாக வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பீகாரைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அனுராக் யாதவ், நிதிஷ் குமார், அமித் ஆனந்த், தனாப்பூர் நகராட்சித் தலைவர் ஜூனியர் பொறியாளர் சிகந்தர் யடாவெண்டு ஆகியோர் கைது செய்யப்பட்டு பீகார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அமித் ஆனந்த் நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் வினாத்தாள் வெளியானது உண்மை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் சிலருக்கு நீட் வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில்களை மனப்பாடம் செய்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பீகார் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமித் ஆனந்த் அளித்துள்ள வாக்குமூலத்தின் விவரம்:
“நீட் தேர்வுக்கான வினாத்தாள் முந்தைய நாள் சிலருக்கு வழங்கப்பட்டது. நாங்கள் பதில்களை மனப்பாடம் செய்தோம். எங்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளும் நுழைவுத் தேர்வின்போது வழங்கப்பட்டதும் ஒன்றாக இருந்தது. “ என்று தெரிவித்துள்ளார்.
“ தனாப்பூர் ஊராட்சி தலைவரான சிகந்தர் உடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. என்னுடைய தனிப்பட்ட விசயங்களுக்காக அவரை சந்திக்க நேர்ந்தது. நானும் நித்திஷ் குமாரும் சென்றிருந்தோம். நான் இருவரும் நுழைவுத் தேர்வு குறித்து சிகந்தரிடம் தெரிவித்தேன்.அவருக்கு தெரிந்த 4 மாணவர்கள் நீட் தேர்வுகாக தயாராகி வருவதாக தெரிவித்தார். அவர்களுக்கு வினாத்தாள் கிடைக்குமா என்றும் என்னிடம் கேட்டார். அதற்கு 30-23 லட்சம் ரூபாய் செலவாகும் என்று நான் தெரிவித்தேன். அவரும் ஒப்புக்கொண்டார். நீட் தேர்வு நாளுக்கு முன் அவர்களுக்கு நான் வினாத்தாள் வழங்கினேன். நான் நீட் தேர்வு வினாத்தாளை வெளியிட்டதை ஒப்புக்கொள்கிறேன்.” என்று போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 21 வயது மாணவர் அனுராக் தனக்கு வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாகவே கிடைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அவரின் வாக்குமூலத்தில்,” நீட் தேர்வுக்காக ஆலன் பயிற்சி மையத்தில் நான் படித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய மாமா சிகந்தர் நீட் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைகள் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். தேர்வுக்கு முன்பு, அவை எனக்கு கிடைத்தன. நான் பதில்களை மனப்பாடம் செய்தேன். தேர்விலும் அதே கேள்விகள் கேட்கப்பட்டன். நான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அனுராக் யாதவ் நீட் தேர்வில் 185/720 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளார். வினாத்தாள் முன்பே கிடைத்திருந்தும் அனுராக் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார்.
பிஹார் காவல்துறையினர் விசாரணை குறித்து முழு விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. நாட்டில் மாணவர்களின் கல்விக்காக நுழைவுத் தேர்வில் இந்த அளவுக்கு முறைக்கேடு நடத்திருப்பது கல்வி அமைச்சகம், தேசிய தேர்வுகள் முகமை ஆகியவற்றின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாகியுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்று குற்றச்சாட்டு உண்மையில்லை என்று கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்,அது உண்மை என்று மாணவர்கள் ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உண்மை என்ற மாணவர்களின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ள நிலையில், நடைபெற்ற தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற பலரும் வலியுறுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் நீட் முறைகேட்டிற்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளது. மேலும், நீட் வினாத்தாள், விடைக்குறிப்பு அவரது வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அமித் ஆனந்த இதேபோல பலமுறை போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியிட்டுள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார் காவல்துறையினரிடம் மத்திய கல்வி அமைச்சகம் விளக்க அறிவிக்கை சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
மே,5 ம் தேதி நடந்த நீட் தேர்வை 24 லட்சம் பேர் எழுதினர்.ஜூன் 14-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு வாரம் முன்னதாகவே ஜூன் 4-ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.