நீட் தேர்வு முடிவுகள்தான் இந்தியா முழுவதும் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறி வருகிறது. நீட் தேர்வு வினாத்தாள் மோசடி, ஆள் மாறாட்டம், தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கிய விதம், ஒரே தேர்வறையைச் சேர்ந்த 8 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளைக் குறிப்பிட்டு, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.


எங்குமே முறைகேடு நடைபெறவில்லை


எனினும் எங்குமே முறைகேடு நடைபெறவில்லை என்றே என்டிஏ திட்டவட்டமாகத் தற்போதுவரை தெரிவித்து வருகிறது.


ஜூன் 23ஆம் தேதி நீட் மறுதேர்வு


நீட் மறு தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, ஜூன் 23ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்கு முன்னதாகத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேசிய தேர்வுகள் முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்றும் என்டிஏ தெரிவித்தது. கருணை மதிப்பெண்கள் இல்லாமல் அவர்கள் பெற்ற மதிப்பெண்களே உண்மையான மதிப்பெண்களாக இருக்கும் எனவும் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் இந்தத் தேர்வை எழுதினால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


44 பேர் கருணை மதிப்பெண்கள் மூலம் 720 


இந்த நிலையில்,  2024ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு முடிவுகளில் 67 பேர், 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், கருணை மதிப்பெண்கள் மூலம் 44 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றது தெரிய வந்துள்ளது.


எண்ணிக்கை மாறுமா?


கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுவதன் மூலம் 23 பேர் மட்டுமே நீட் தேர்வில் முதலிடம் பெறுவர். ஒருவேளை நீட் மறுதேர்வில் யாரேனும் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றால், அவர்கள் முதலிடம் பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக தேர்வு மையங்களில் ஏற்பட்ட நேரம் குறைவாக வழங்கப்பட்ட குளறுபடிகள் காரணமாக, சில மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதை எதிர்த்து 10-க்கும் மேற்பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வில் தாக்கல் செய்யப்பட்டன. 


மருத்துவக் கலந்தாய்வுக்குத் தடை இல்லை


வழக்கு விசாரணையின்போது, கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மட்டும் நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.