நீட் தேர்வு மோசடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முறையான நீதி வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


நீட் தேர்வு வினாத்தாள் லீக், ஆள் மாறாட்டம், தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கிய விதம், ஒரே தேர்வறையைச் சேர்ந்த 8 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளைக் குறிப்பிட்டு, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 


1,563 தேர்வர்களுக்கு நீட் மறு தேர்வு


இதற்கிடையே தேர்வறையில் நேரக் குறைவால் பாதிக்கப்பட்டதால் கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மட்டும் நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 13) தெரிவித்தது. எனினும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.


இதற்கிடையே மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்த மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வர்களை மத்திய அரசு ஒருபோதும் கைவிடாது என்றும் உறுதி அளித்து இருந்தார்.


இந்த நிலையில், நீட் தேர்வு மோசடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முறையான நீதி வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ''நீட் தேர்வில் எப்படி 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற முடியும்? அதனால்தான் சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டில் ஈபிஎஸ் ஆட்சியில்தான் நீட் நுழைந்தது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு வரவில்லை. நீட் தேர்வு மோசடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முறையான நீதி வழங்கப்பட வேண்டும். ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது எட்டாக்கனியாகி விட்டது. 


முதல்முறை நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களின் சதவீதம் வெறும் 31 தான். இரண்டாவது, மூன்றாவது முறை எழுதிய நபர்கள்தான், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  2017 முதல் இந்தியாவில் நீட் தேர்வு அமலுக்கு வந்தது. 2017 இறுதி முதல் முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வை எதிர்த்து வருகிறார்.


கருணை மதிப்பெண்களே மிகப்பெரிய மோசடி


நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது மிகப்பெரிய மோசடி. ஆன்லைனில் நடைபெற்ற CLAT தேர்வில், சர்வர் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டது. இதனால் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதை அடிப்படையாக வைத்து நேரடியாக நடைபெற்ற நீட் தேர்வுக்கு எப்படிக் கருணை மதிப்பெண்கள் வழங்க முடியும்?


தாமதமாகத் தேர்வர்கள் வந்தால், உள்ளேயே அனுமதிப்பதில்லை என்னும்போது, நேரக் குறைவு எங்கிருந்து வந்தது? கருணை மதிப்பெண்கள் பெற்று, 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த யாருமே இல்லை’’.


இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.