நீட் தேர்வு சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. ரிட் மனுவைத் தாக்கல் செய்ய யோசனை அளித்தது யார் என்றும் ரிட் மனுவை எப்படித் தாக்கல் செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.  


பின்னணி என்ன?


கடந்த 2017-18ஆம் ஆண்டில் மத்திய அரசால் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. 


சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் சட்டத் திருத்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அது குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. அதைச் சுட்டிக்காட்டி ரிட் மனு மீதான விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. 


அந்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், ரிட் மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்குத் தள்ளி வைத்தது. இந்த நிலையில் ரிட் மனு மீதான விசாரணை இன்று (பிப்.24 ஆம் தேதி) நடைபெற்றது. அப்பொழுது தமிழ்நாடு அரசு சார்பில் ரிட் மனுவைத் திரும்ப பெறக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


அப்பொழுது நீதிபதிகள், நீட் விவகாரத்தில் நீங்கள் எவ்வாறு ரிட் மனுவை தாக்கல் செய்தீர்கள்? இந்த யோசனையை அளித்தது யார்? என்று கேள்வி எழுப்பினர். அப்போது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் இந்த ரிட் மனுகடந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டது என்று தெரிவித்தார். எந்த ஆட்சியில் இருந்தாலும் இந்த ரிட் மனு எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருப்பதால், இதுபோன்ற ரிட் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். 


அதைத் தொடர்ந்து நீட் தேர்வைக் கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக புதிய வழக்கு பிப்ரவரி 18-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் நிலையில், இந்த ரிட் மனுவைத் தாங்கள் திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என்று என்று தெரிவித்தார். இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டத்தை எதிர்த்த ரிட் மனுவைத் திரும்ப பெற அனுமதி அளித்தது.