அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, திறன் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நீட் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இந்த வகுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 


திறன்மிக்க ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு நேரடியாகப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் தொடங்கும் நீட் பயிற்சி, தற்போது அக்டோபரிலேயே தொடங்க உள்ளது.


நாடு முழுவதும் 2022ஆம் ஆண்டில், 17.64 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் செப்.7 அன்று வெளியாகின. இதில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தேர்ச்சி விகிதம் 56.3% ஆக உள்ளது. ஒட்டுமொத்தத் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. எனினும் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் 2 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது. 


குறையும் தமிழகத் தேர்ச்சி




தமிழ்நாட்டில் 2018ஆம் ஆண்டில் 39.56 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த விகிதம் 2019ஆம் ஆண்டில் 48.57 ஆக உயர்ந்தது. இது 2020ஆம் ஆண்டில் 57.43% மாணவர்களாக உயர்ந்தது. எனினும் 2021ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 3 சதவீதம் அளவுக்குக் குறைந்து, 54.40 ஆக இருந்தது. இது தற்போது மேலும் குறைந்து 51.28% ஆக உள்ளது. 



2020ஆம் ஆண்டு 99,610 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி, 57,215 பேர் தேர்ச்சிபெற்றனர். அதாவது 2020-ல் 57.43 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்திருந்தனர். 2021-ல் 1,12,894 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் 1,08,318 பேர் தேர்வை எழுதினர். இதில், 58,922 மாணவர்கள் (54.40%) தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு (2022-ல்) 51.28% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 1,32,167 பேர் தேர்வு எழுதி, அதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.


அரசுப் பள்ளி தேர்ச்சி


நீட் தேர்வை இந்த ஆண்டு 17,517 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் எழுதிய நிலையில், ஏராளமான மாணவர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியானது. 2018ஆம் ஆண்டு  19,680 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 2019-ல் விண்ணப்ப விகிதம் 8,132 ஆகக் குறைந்தது. இது 2020-ல் மேலும் குறைந்து 7 ஆயிரமாக ஆனது.


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட நிலையில், சற்றே அதிகரித்து 11,236 ஆக உயர்ந்தது. 2022-ல் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 17,517 என்ற நிலையில், தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது.  


கடந்த ஆண்டு அரசு உரிய முறையில் பயிற்சி வழங்காததால்தான் தேர்ச்சி குறைந்ததாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, திறன் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நீட் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இந்த வகுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 


திறன்மிக்க ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு நேரடியாகப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் தொடங்கும் நீட் பயிற்சி, தற்போது அக்டோபரிலேயே தொடங்க உள்ளது.