நீட் மசோதா குறித்து குடியரசு தலைவர் மாளிகை அனுப்பிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், காணாமல் போவது கடிதமல்ல நிர்வாக நேர்மை என்று எம்.பி. சு.வெங்கடேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். 


மர்த்துவப் படிப்பில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க., .அ.தி.மு.க. ஆகிய பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


நீட் விலக்கு மசோதா


கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு சட்டசபையில் நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.


இந்த மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு பதில் தந்த குடியரசுத் தலைவர் தரப்பு நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு உள்ளது என்று கூறியிருந்தனர்.


கடிதம் வரவில்லை


இதையடுத்து, குடியரசுத் தலைவரின் பதிலின் அடிப்படையில் உள்துறை அமைச்சகத்தில் எம்.பி.யின் கடிதம் என்ன நிலையில் இருக்கிறது? என்பது குறித்து தெரிந்த கொள்வதற்காகக் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில், உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவரால் அனுப்பிய கடிதத்தை பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இந்த நிலையில், நீட் மசோதா குறித்து குடியரசு தலைவர் மாளிகை அனுப்பிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், காணாமல் போவது கடிதமல்ல நிர்வாக நேர்மை என்று எம்.பி. சு.வெங்கடேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து இன்று அவர் தெரிவித்து உள்ளதாவது:


’’தமிழ்நாடு  மாநில பொதுப் பள்ளிக்கான மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அனுப்பிய கோரிக்கை விண்ணப்பத்தை இணைத்து, நான் குடியரசுத் தலைவருக்கு 19.01.2023 அன்று கடிதம் எழுதி இருந்தேன். அதில் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் மசோதாவுக்கு, 15 மாதங்களாக  ஒப்புதல் தரப்படாமல் தாமதம் ஆவதையும், இதனால் லட்சக்கணக்கான தமிழக பெற்றோர்கள், மாணவர்கள் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகி இருப்பதை சுட்டிக் காட்டி இருந்தேன். 


இதற்கு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்தது. அதில் எனது கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. 


இந்த நிலையில் பொதுப்பள்ளிக்கான மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுள்ள தகவல் உரிமைச் சட்ட பதில் (RTI reply) அதிர்ச்சி அளிக்கிறது. 


"24.12.2022 தேதியிட்ட கோரிக்கை விண்ணப்பத்தை இணைத்து 19.01.2023 அன்று வெங்கடேசன் அளித்த கடிதம், தங்களின் கடிதத்தில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து எங்கள் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டிருப்பது போல எங்களுக்கு அது வரப் பெறவில்லை." என்று உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.


மேல் நடவடிக்கைக்கு அனுப்பிவைப்பு


இந்த நாட்டின் நிர்வாக தலைமையகமான குடியரசுத் தலைவர் மாளிகை நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதத்தை மேல் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக சொல்கிறது. ஆனால் உள்துறை அமைச்சகமோ அப்படியொரு கடிதம் வரவில்லை என்று சொல்கிறது.


தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான பிரச்சினையில், மத்திய அரசு சார் நிர்வாகம் எவ்வளவு அலட்சியப்போக்கோடு நடந்து கொள்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம். காணாமல் போனது கடிதமல்ல, நிர்வாகத்தின் நேர்மை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


21 மாதங்களாக நிலுவையில் உள்ள நீட் மசோதா


இன்று குடியரசுத் தலைவருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். உடனடியாக தலையிட்டு 21 மாதங்களாக நிலுவையில் உள்ள நீட் மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் தர ஆவன செய்யுமாறு வேண்டியுள்ளேன்’’.


இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.