NEET 2023 Exam Date: 2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. 


எம்பிபிஎஸ், பிடிஎஸ் ( பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது.  ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. 


நாடு முழுவதும் 2022ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்தனர். பி.டி.எஸ். எனப்படும் பல் மருத்துவம் மற்றும் எம்.பி.பி.எஸ். எனப்படும் இளங்கலை மருத்துவ படிப்புகள் இரண்டிற்குமான நீட் தேர்வை மொத்தம் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதியிருந்தனர்.


2022 தேர்வு


இந்த தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 543 நகரங்களில் அமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. நீட் தேர்வுகள் இந்தியாவில் உள்ள நகரங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்காக கொழும்பு, காத்மாண்டு, பாங்காக், கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், அபுதாபி, மஸ்கட், ஷார்ஜா, குவைத், தோஹா, மனாமா, ரியாத், லாகோஸ் நகரங்களிலும் நடத்தப்பட்டது.


2023 நீட் தேர்வு எப்போது?


இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. 


எனினும் விண்ணப்பப் பதிவு எப்போது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. விண்ணப்பப் படிவம் வெளியான உடன், தகுதியான தேர்வர்கள் nta.ac.in மற்றும் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 


நீட் தேர்வில் பொதுவாக இயற்பியியல், வேதியியல் உயிரியல் மற்றும் கணிதம் அல்லது எலக்டிவ் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். கல்வித் தகுதி, பாடத்திட்டம், தகுதி மற்றும் பிற தேவையான விவரங்களை என்டிஏ விரைவில் வெளியிட உள்ளது. 


மருத்துவக் கலந்தாய்வு 


நாடு முழுவதும் 645 மருத்துவக் கல்லூரிகள், 318 பல் மருத்துவக் கல்லூரிகள், 914 ஆயுஷ் கல்லூரிகள், 47 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் நீட் தேர்வு முடிவுகளை ஏற்றுக்கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. மாநிலக் கல்லூரிகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் 100 சதவீத ஒதுக்கீட்டுக்கும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.