என்சிஇஆர்டி புதிய பாடத்திட்டம் மற்றும் அதன் புத்தகங்களில் அனைத்து பாலினங்களையும் உள்ளடக்கிய பாலின சமத்துவத்தைக் கொண்டுவர உள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது. 


முன்னதாக பெண்கள், கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் குழந்தைகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்திருந்தது. அதில், பள்ளி பாடப் புத்தகங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் பழங்கால பாத்திரங்களிலேயே சித்தரிக்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. 


பாலின அசமத்துவம் போக்கப்பட வேண்டும் என்றும் ஒரே மாதிரியான பார்வை மாற்றப்பட வேண்டும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆர்டி) நாடாளுமன்றக் குழு அறிவுறுத்தல் வழங்கி இருந்தது. அனைத்து பாலினங்களையும் உள்ளடக்கிய கருத்து மற்றும் காட்சி வடிவிலான சித்தரிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்களில் முன்மாதிரியாக இருக்கும் பெண்களின் பங்களிப்புகள் மற்றும் அதை அடைவதற்கான பாதையை வழிகாட்டும் வகையில் சித்தரிக்கும் வகையில் பாடப் புத்தக உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இது அனைவர் மத்தியிலும், குறிப்பாக பெண் குழந்தைகள் மத்தியில் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் என்றும் நாடாளுமன்றக் குழு தெரிவித்து இருந்தது. 


இந்நிலையில், பெண்கள், கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் குழந்தைகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆலோசனைகளை கவனத்தில் கொண்டுள்ளதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலைத் தெரிவித்த  நாடாளுமன்ற நிலைக் குழு, நேற்று இதற்கான அறிக்கையையும் சமர்ப்பித்தது. அதில், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (National Curriculum Framework), புதிய பாடத்திட்டம் மற்றும் அனைத்துப் பாடப் புத்தகங்கலிலும் பாலின சமத்துவம் கொண்டு வரப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"பாடப்புத்தகங்களை மறு உருவாக்கம் செய்யும்போது, சுற்றுச்சூழல் முக்கியத்துவம், மனித விழுமியங்கள், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளின் பிரச்சினைகள் போன்ற பிற சிக்கல்களும் பள்ளி பாடப்புத்தகங்களில் போதுமான அளவு சேர்க்கப்பட வேண்டியது அவசியம்" என்றும்  நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான தேசிய வழிநடத்தும் குழு


தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் அம்சங்களின் படி, நான்கு தேசிய பாடத்திட்டக் கட்டமைப்புகளை இக்குழு உருவாக்கும்.


1.பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு, 
2.ஆரம்பகாலக் குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம், 
3.ஆசிரியர் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம்
4.வயது வந்தோர் கல்விக்கான தேசியப் பாடத்திட்ட அமைப்பு.


பாடத்திட்டச் சீர்திருத்தங்களை முன்மொழிய இந்த நான்கு பகுதிகளுடன் தொடர்புடைய தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் அனைத்துப் பரிந்துரைகளையும் மையமாகக் கொண்டு பள்ளிக் கல்வி, ஆரம்ப கால குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE), ஆசிரியர் கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை இந்தக் குழு விவாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.