அனைத்து வகுப்புகளுக்கும் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2024ஆம் ஆண்டு முதல் புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவலை மத்தியக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பாக பள்ளி மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படுகின்றன. எஸ்சிஇஆர்டி எனப்படும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மாநிலக் கல்வி வாரியங்கள் தயாரிக்கும் புத்தகங்களுக்குப் பொறுப்பு வகிக்கிறது.
இந்த நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவலை மத்தியக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 2024-25ஆம் கல்வி ஆண்டு முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, தேசிய கல்விக் கொள்கை அம்சங்களின்படி 6 வயது நிறைவடைந்தால் மட்டுமே ஒரு குழந்தை 1ஆம் வகுப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதன்படி கேந்திரிய வித்யாலயா, சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்தியக் கல்வி வாரியங்களில் சேர 6 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். இந்த முறை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மாநில கல்விக் கொள்கை
எனினும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாகத் தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றைத் தமிழக அரசு அமைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்ய, பின்வரும் குழுவினை அமைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி குழுவின் தலைவராக புதுடெல்லி உயர் நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி த.முருகேசன் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து மாநில கல்விக் கொள்கை உருவாக்கக் குழு பொது மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை 8 மண்டலங்களாகப் பிரித்து, கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டங்களை மாநில கல்விக் கொள்கை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மேற்கொள்கின்றனர். அதேபோல மின்னஞ்சல் மற்றும் தபால் மூலமாக பொதுமக்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.