மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்தத் தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் 2023 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு , டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கியது. இவர்களுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டைப் போலவே இரண்டு கட்டமாக நடைபெற உள்ளன.
முதல் அமர்வு (session 1) ஜனவரி மாதத்திலும் இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்திலும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 6, 8, 10- 12 ஆகிய தேதிகளில் 2ஆவது அமர்வு நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
இரண்டு அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள் தரவரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். இரண்டாவது அமர்வுக்காக விண்ணப்பப் படிவங்கள் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளன.
இந்தநிலையில், ஜேஇஇ மெயின் தேர்வின் ஜனவரி மாத அமர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு தமிழக பள்ளிக்கல்வித்துறையும் தேர்வுக்கு விலக்கு அளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை வைத்தது.
இதையடுத்து, ஜேஇஇ தேர்வில் 10 ம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக மாணவர்கள் உள்ளீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வுகள் முகமை விலக்கு அளித்துள்ளது.
கொரோனா காலத்தில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி என்று மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக மாணவர்கள் இணையதளத்தில் பதிவிடும்போது மதிப்பெண்கள் கேட்கப்படாது என தேசிய தேர்வுகள் முகமை விளக்கமளித்துள்ளது.
ஜே.இ.இ விண்ணப்பத்தில் 10 வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளித்த தேசிய தேர்வு முகமை நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேசிய தேர்வு முகமையின் இந்த நடவடிக்கை நிம்மதியளிக்கிறது; வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் 2020-21 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாததால் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால், பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் குறிப்பிடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் தமிழக மாணவர்களால் ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. தமிழ்நாட்டு மாணவர்களின் இந்த சிக்கல் குறித்து நான் தான் தமிழக அரசின் கவனத்திற்கும் தேசிய தேர்வு முகமையின் கவனத்திற்கும் கொண்டு சென்றேன்.
நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் இதை சுட்டிக்காட்டி தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன். அதையேற்று தமிழ்நாடு மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் ஜே.இ.இ நுழைவுத் தேர்வை எழுதி வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.