3, 6, 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக ‘எஸ்இஏஎஸ்’ என்னும் மாநில அளவிலான திறனறித் தேர்வு, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் பள்ளிக் கல்வித்துறையால் இன்று நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தமிழ்நாட்டில் இருந்து 7.42 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.


நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக தேசிய சாதனை ஆய்வு தேர்வு (National Achievement Survey- NAS) நடத்தப்படுகிறது.  3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தத் தேர்வை மத்தியக் கல்வி அமைச்சகம் நடத்துகிறது. இந்த தேர்வு மதிப்பீட்டின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் கண்டறியப்பட்டு, தேவையான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்ட அளவில் (district level) இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 


அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு


அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் வட்ட அளவில் (block level) 3, 6, 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக ‘எஸ்இஏஎஸ்’ (State Educational Achievement Survey- SEAS) என்னும் மாநில அளவிலான திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் பள்ளிக்கல்வித் துறையால் இன்று (நவம்பர் 3ஆம் தேதி) நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 11 கோடி மாணவர்கள் எழுதும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 7.42 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.


3, 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் மதிப்பீடு செய்ய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் டயட் (மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்) முதல்வர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 




தேர்வு எப்படி?


பயிற்று மொழி தமிழ் என்றால், தமிழ் மற்றும் கணக்கு பாடங்களில் தேர்வு நடைபெறுகிறது. அதேபோல பயிற்று மொழி ஆங்கிலம் என்றால் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தேர்வு நடைபெறுகிறது. 3ஆம் வகுப்பு தமிழ் (தமிழ் வழி மாணவர்களுக்கு), ஆங்கிலம் (ஆங்கில வழி மாணவர்களுக்கு) 20 கேள்விகள், கணக்கு பாடத்தில் 20 கேள்விகள் என மொத்தம் 1 மணி நேரம் தேர்வு நடைபெறுகிறது.


6ஆம் வகுப்பு தமிழ் (தமிழ் வழி மாணவர்களுக்கு), ஆங்கிலம் (ஆங்கில வழி மாணவர்களுக்கு) 25 கேள்விகள், கணக்கு 25 கேள்விகள் என 1 மணி 15 நிமிடங்கள் தேர்வு நடைபெறுகிறது. 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கில பாடத்தில் 30 கேள்விகளும், கணிதத்தில் 30 கேள்விகளும் இடம்பெறும். இவர்களுக்கு 1 மணி 30 நிமிடங்கள் தேர்வு நடைபெறுகிறது.


பாடத்திட்டம் 


3ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு, 2ஆம் வகுப்பு மற்றும் 3ஆம் வகுப்பு கற்றல் அடைவு அடிப்படையிலும், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 5, 6ஆம் வகுப்பு கற்றல் அடைவு அடிப்படையிலும், 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 8, 9ஆம் வகுப்பு கற்றல் அடைவு அடிப்படையிலும் கேள்விகள் கேட்கப்படுகிறது.


மாநிலம் முழுவதும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேர்வு நடைபெறுகிறது. சென்னை மாவட்டத்தில் 28,471 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். தேர்வு கண்காணிப்பு பணிக்காக டயட், டிடிஐ, பி.எட்., எம்.எட். பயிற்சி மாணவர்கள் 1065 பேர், கள ஆய்வாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்ப்பதாகக் கூறி வரும் நிலையில், தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை படிப்படியாக மாநில அரசு அமல்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.