12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று,  மொத்தம் 600 மதிப்பெண்களை வாங்கி சாதனை படைத்துள்ளார் திண்டுக்கல்லைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளியின் மகள் நந்தினி. 


12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, மொத்த மதிப்பெண்ணாக 600-க்கு 600 மதிப்பெண் வாங்கியுள்ளார். இதனால் மாவட்டத்தில் முதலிடம் பெற்றதோடு, மாநிலத்திலும் முதலிடம் பெற்றுள்ளார்.


சாதனை படைத்தது குறித்துப் பேசினார் மாணவி நந்தினி.


’’எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளிக்குப் பெருமை சேர்த்திருக்கிறேன் என்பதில் பெருமையாக உள்ளது. பள்ளி என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றி இருக்கிறேன். 


என் அப்பா கூலித் தொழிலாளிதான். ஆனால் படிக்க வைக்க முடியாது என்றோ, படிக்கக் காசில்லை என்று எப்போதுமே சொன்னதில்லை. என்ன விரும்புகிறோயோ அதைச் செய் என்றுதான் கூறுவார். என் அப்பாவின் உழைப்புதான் எல்லாவற்றுக்கும் காரணம். அவர் என்னைப் படிக்க வைக்கவில்லை என்றால், இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன்.


எங்கள் பள்ளியின் பள்ளி தாளாளர் ஜெயபால், தலைமை ஆசிரியர் அகிலா, தமிழ் ஆசிரியர் அனுராதா, ஆங்கில ஆசிரியர் தீபா, ஆசிரியர்கள் மரிய சாந்தி ராஜலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஊக்கமளித்தனர். நீதான் முதல் மதிப்பெண் பெறுவாய் என்று ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். தற்போது அதிக மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்களின் ஊக்குவிப்பே காரணம். 



எனது வெற்றிக்கு பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று பெற்றோர் என்னை வற்புறுத்தியதில்லை. உன் விருப்பம் என்று சொல்வார்கள். எனக்கு ஆதரவு கொடுக்க அவர்கள் தயங்கியதே இல்லை. வழக்கமான வகுப்புகள் தவிர்த்து காலை, மாலை தலா 1 மணி நேரம் பள்ளி நடத்திய சிறப்பு வகுப்புகளில் படித்தேன்.  வீட்டில் இருந்தே முழுமையாகப் படித்தேன். 


எல்லோராலும் எல்லாவற்றையும் அடைய முடியும். எல்லா மாணவர்களும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது என்பதே எனது அறிவுரை. பி.காம். சி.ஏ. படித்துவிட்டு, பட்டயக் கணக்காளர் ஆகவேண்டும் என்பதே என்னுடைய ஆசை.


மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


பொதுத் தேர்வு என்பது பள்ளிகளில் நடக்கும் தேர்வு மாதிரி அல்ல. மதிப்பெண்கள் குறைந்ததாலேயே அவர்கள் சரியாக எழுதவில்லை என்று அர்த்தமில்லை. இதை நினைத்து யாரும் துவண்டு போகக் கூடாது’’.


இவ்வாறு மாணவி நந்தினி தெரிவித்தார்.