பள்ளி பாடப் புத்தகங்களில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது குறித்து முதலமைச்சரின் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஏபிபி நாடு வெளியிட்ட பட செய்தியைப் (Card) பகிர்ந்து அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நல்லகண்ணுவுக்கு நூற்றாண்டு விழா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா நேற்று (டிசம்பர் 29) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை
நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி,’’தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளி பாடப் புத்தகங்களில் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். சிவப்பு சிந்தனையும், வாழ்வியலும், நம் வரலாறும் அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதுகுறித்து ஏபிபி நாடு சார்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அதைக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ’’விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய திரு.நல்லகண்ணு அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப் புத்தகத்தில் இணைப்பது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்’’ என்று பதில் அளித்துள்ளார்.