யுபிஎஸ்சி எனப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் நேற்று (ஏப்ரல் 16) வெளியாகின. இதில் 1016 தேர்வர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்திய அளவில் முதல் இடத்தை ஆதித்யா ஸ்ரீவத்சவா பிடித்துள்ளார். 


தமிழ்நாட்டில் இருந்து புவனேஷ் ராம் என்னும் தேர்வர் முதலிடம் பிடித்துள்ளார். அவர் அகில இந்திய அளவில் இவர் 41ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிரசாந்த் என்னும் மருத்துவர் பெற்றுள்ளார். இவர் இந்திய அளவில் 78ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.




நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி


இவர் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று, முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்றுள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரான பிரசாந்த், 2022ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்பை முடித்தார். அப்பா கேன்சரால் இறந்துவிட, அம்மாவின் சம்பாத்தியத்தில் மருத்துவப் படிப்பை முடித்தார்.


தொடர்ந்து தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இணைந்து பயிற்சி பெற்றார். இதில் பலகட்டப் பயிற்சிகள், தேர்வுகளை முடித்தவர், தன்னுடைய முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 78ஆவது ரேங்க் என்பதால் அவருக்கு ஐஏஎஸ் பணியே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




உதவித்தொகையோடு பயிற்சி


இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய பிரசாந்த், ’’தாய் பசித்திருக்கும் தன் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதைப் போல, தாயுள்ளம் கொண்ட முதல்வர் ஸ்டாலின், எங்களைப் போன்ற தேர்வர்களுக்காக யுபிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சியை வழங்கினார். உதவித் தொகையோடு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டதால், யார் கையையும் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க தேவையில்லாத சூழல் ஏற்பட்டது. தாயுமானவர் ஸ்டாலினுக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார். 






முதல்வர் பாராட்டு


இதைத் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், நான் முதல்வன் திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்! நேற்று வெளியான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் அதற்கு சாட்சி என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.  


'நான் முதல்வன்' திட்டம்


மாணவர்களுக்கு குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதில் படிப்புகள், கல்லூரிகள், நுழைவுத் தேர்வுகள், உதவித் தொகை, கல்விக் கடன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்த தகவல்கள் விரிவாக உள்ளன. 


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "போட்டித் தேர்வுப் பிரிவு" என்னும் புதிய பிரிவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.