காலை உணவுத் திட்டம் 2023-24ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதற்கட்டமாக 2022-23ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டது.
தற்போது இத்திட்டமானது 2023-24ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அணைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
* மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல்
* மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தலை உறுதி செய்தல்
* மாணவர்கள் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல்
* பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் கல்வியில் தக்க வைத்துக்கொள்ளுதல்
* வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச் சுமையைக் குறைத்தல்
ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்றும் நோக்குடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து திட்ட செயலாக வழிகாட்டு நெறிமுறைகளும் இத்திட்டம் சார்ந்து பள்ளி அளவில் திட்ட செயலாக்கம் (School Level Execution) பற்றி செயல்முறைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்பட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் நடைமுறைப்படுத்தும் பொருட்டு கீழ்க்காணுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கீழ் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), உதவித் திட்ட அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (தொடக்கக் கல்வி), அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், அனைத்து வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் அனைத்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவார்கள்.
மாவட்ட அளவில் ஏற்கனவே தொடக்கக் கல்வித்துறையில் மாற்றுப்பணியில் பணிபுரிந்து வரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டப் பணி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இவர்கள் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தனக்கு கீழ் செயல்படும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (தொடக்கக் கல்வி), அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், அனைத்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களை இத்திட்டத்தில் இணைத்தல் ஆகியவை மூலம் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் சென்றடைவதை உறுதி செய்தல் வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு வட்டார வளமைய அளவில், ஓர் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநரை முதலமைச்சரின் காலை உணவுத் திட்டப் பணியைக் கண்காணிக்க பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலருமான இளம்பகவத் தெரிவித்துள்ளார்.