அனைத்துத் துறைகளிலும் 4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள் உள்ள நிலையில், அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் 4 தவணைகளில் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப்-1 பணியிடங்களை நிரப்புவதற்கான, தேர்வு தொடர்பான தகவல்கள், டிஎன்பிஎஸ்சியின் 2023ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் இல்லாமலிருந்த நிலையில் புதிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, முதல்நிலைத் தேர்வு 2023 நவம்பர் 23ம் தேதியும், முதன்மைத் தேர்வு 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 24ம் தேதி நடைபெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குரூப்-1 தேர்வு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எத்தனை பணியிடங்களுக்காக, தேர்வுகள் நடத்தப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
பின்னணி என்ன?
அண்மையில் 2023 ஆம் ஆண்டுக்கான உத்தேச ஆண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதன்படி, அடுத்த ஆண்டில் மொத்தம் 11 போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்படவுள்ளன. இவற்றில் 8 போட்டித் தேர்வுகள் 2023-ஆம் ஆண்டிலும், 3 போட்டித் தேர்வுகள் 2024-ஆம் ஆண்டிலும் நடத்தப்பட உள்ளன. ஆனால், இதில் குரூப் 1 பதவிகளுக்கான அறிவிப்புகள் குறித்த தகவல் இடம்பெறவில்லை. இது இளைஞர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்துக் கூறியிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், ''சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. 2023-ஆம் ஆண்டில் குரூப் 1, 2, 3 பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படாததால் தகுதியும், திறமையும் உள்ள பலர் வயது வரம்பைக் கடந்து அரசுப் பணியில் சேரும் வாய்ப்பை இழக்கின்றனர். 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.
அதன்படி பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் இயல்பாக ஏற்படும் 20 ஆயிரம் காலியிடங்களையும் சேர்த்து, ஒவ்வொரு ஆண்டும் 1.30 லட்சம் பேர் அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அதில் 10 விழுக்காட்டினரைக் கூட தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வராதது தமிழ்நாட்டு பட்டதாரி இளைஞர்களின் அரசுப் பணி கனவை கலைக்கும் செயலாகும்'' என்று தெரிவித்திருந்தார்.
அனைத்து காலியிடங்களையும் நிரப்ப வேண்டும்
இந்நிலையில், தற்போது குரூப்-1 தேர்வுக்கான உத்தேச தேர்வு அட்டவணையை, தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராமதாஸ், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதோடு, அனைத்து காலியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
''தமிழ்நாட்டில் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட குரூப் 1 பணிகளுக்கான தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும்; நவம்பர் மாதத்தில் முதல் நிலைத் தேர்வு, 2024 ஜூலையில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது!
டி.என்.பி.எஸ்.சி அடுத்த ஆண்டு மிகக்குறைந்த பணிகளுக்கு தேர்வு நடத்துவதையும், குரூப் 1 , குரூப் 2 , குரூப் 3 பணிகளுக்கு தேர்வு நடத்தப்படாததையும் சுட்டிக்காட்டியிருந்தேன். அதையேற்று முதல் தொகுதி தேர்வுகளை சேர்த்து புதிய பட்டியலை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டதில் மகிழ்ச்சி!
முதல் தொகுதி பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகளுக்கும், முதன்மை தேர்வுகளுக்கும் இடையே 9 மாத இடைவெளி மிகவும் அதிகம். இதை குறைக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை முதல் தொகுதி பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுவதை டி.என்.பி.எஸ்.சி உறுதி செய்ய வேண்டும்!
குரூப் 2 , குரூப் 3 பணிகளுக்கும் தேர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும். அனைத்துத் துறைகளிலும் 4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள் உள்ள நிலையில், அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் 4 தவணைகளில் நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.