நாட்டிலேயே தலைசிறந்த கல்விமுறை தமிழ்நாட்டு கல்வி முறை. நம் கல்வி முறைதான் மாணவர்களைச் சிந்திக்க வைக்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தன்னிகரற்ற வகையில், தனித்துவமாகச் செயல்பட்டும் வரும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்தப் பெயர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று மாற்றப்பட்டது. சென்னை வண்டலூரில் ஆசிரியர் தின நிகழ்வும் விருது விழாவும் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு, விருதுகளை வழங்கி வருகிறார்.  


நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ’’தமிழகத்தில் உள்ள கல்வி முறையை சிலர் குறை சொல்வதை என்னால் ஏற்க முடியாது. நாட்டிலேயே தலைசிறந்த கல்விமுறை தமிழ்நாட்டு கல்வி முறை. நம் கல்வி முறைதான் மாணவர்களைச் சிந்திக்க வைக்கிறது.


ஆசிரியர்களே மன்னிக்க மாட்டார்கள்


தமிழ்நாட்டின் கல்வி முறையைக் குறை சொல்பவர்களை ஆசிரியர்களே மன்னிக்க மாட்டார்கள். முன்னணி மருத்துவர்கள் விஞ்ஞானிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அரசுப் பள்ளிகளில் படித்த பலர் இஸ்ரோ விஞ்ஞானிகளாகப் பணியாற்றி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.


மாநில பாடத்திட்டத்தின் தரம்


முன்னதாக, சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைபள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது என்றும் பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் பேசிய போது அவர்களின் அறிவுத்திறன் குறைவாக இருந்ததை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார்.


அதேபோல, ’’அரசுப் பள்ளிகளில் படிக்கும் 75 சதவீத மாணவர்களுக்கு எண்களை படிக்கத் தெரியவில்லை. 40 சதவீத மாணவர்களால் எழுத்துகளை படிக்க முடியவில்லை. இது மிகவும் ஆபத்தான நிலை. கற்கும் திறன் குறைந்தபோதும் பட்டங்கள் வழங்கப்படுகின்றன’’ என்றும் ஆளுநர் தெரிவித்து இருந்தார். இது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.


இதற்குத் தன்னுடன் ஆய்வுக்கு வருமாறும், தமிழக பாடத் திட்டம் குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து இருந்தார்,


இந்த நிலையில் ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.