நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய இளைஞர்களை தமிழகக் காவல்துறை கைது செய்தது ஏன் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
’நீர் எழில் பள்ளி’ திட்ட அடிக்கல் நாட்டல்
பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று நீர் எழில் பள்ளி திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசுப் பள்ளிகளில் நீர் மேலாண்மைக்கான தனி செயல்திட்டம் தொடங்கும் விதமாக "நீர் எழில் பள்ளி" (நீர் பாதுகாப்பு, பசுமை வளம், நிலைத்த எதிர் காலம்) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்தத் திட்டம் சென்னை, எழும்பூர், கெங்கு ரெட்டி சாலையில் அமைந்துள்ள பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (22.07.2026) தொடங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:
’’நீட் தொடர்பான அறவழி, அமைதியான போராட்டத்தை ஆதரிக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவரின் கைதை கடுமையாகக் கண்டிக்கிறோம். இங்கு தமிழ்நாட்டில் மக்களுக்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவு இல்லாமல், போக்குவரத்து இடையூறு இல்லாமல், முறைப்படி காவல்துறை அனுமதி பெற்று போராடினால் எந்த பிரச்சினையும் இல்லை. அவ்வாறு இல்லாமல், தூண்டுதலால் நடந்த போராட்டங்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை. மருத்துவ அவசரம், போக்குவரத்து உள்ளிட்ட பொது மக்களின் தேவைகளை போராடும் எல்லோரும் கருத்தில்கொள்ள வேண்டும்.
நீட் சீரமைப்பு கிடையாது
டெல்லியில் போராட்டக் களத்தில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டார். அவர் சாலையில் போராடவில்லை. அதற்கும் நமக்கும் வித்தியாசம் உள்ளது. அன்றும் இன்றும் நீட் ஒழிப்புதான் தவெகவின் கொள்கை. நீட் சீரமைப்பு எங்களின் கொள்கை கிடையாது.
வெறும் போராட்டம் அல்ல, சுமூகத் தீர்வை நோக்கிய அரசியலைத்தான் நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதுதான் நிரந்தரத் தீர்வு’’ என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
