கல்விக்கு என்று மிகப்பெரிய பிரச்சினை வந்திருப்பதாகவும் இந்தி திணிப்பு என்பது அதிக அளவில் இருப்பதாகவும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வேதனை தெரிவித்துள்ளார்.


சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் சமூகவியல் துறை சார்பில் பொன் விழா நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் முனைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


விழா மேடையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், ''பொதுவாக எந்த ஆட்சியிலும் பசுமைத் தரத்தை உயர்த்துவோம் என்று யாரும் சொன்னது கிடையாது. ஆனால் பசுமையின் மீது அக்கறையாக உள்ளவர்தான் நமது முதலமைச்சர். பசுமையைப் பாதுகாப்பதில் சௌமியா அன்புமணி நிறைய பணிகளை செய்து வருகிறார்,


தமிழகத்தில்  தற்போது பசுமைபரப்பு 20.27 சதவீதமாக இருக்கிறது. அதனை 25 சதவீதமாக மாற்ற, ஆட்சிக்கு வரும் முன் திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சமூகத்தின் மீதும் பசுமையின் மீதும் அக்கறை கொண்டதால்தான் பசுமை பரப்பை உயர்த்துவதாக முதல்வர் அறிவித்திருந்தா. இது ஒரு தேர்தல் அறிக்கையா என்றும் பலரும் கேட்கலாம். இலவசம் என்று அறிக்கையில்  சில இருந்தாலும் பசுமையை பாதுகாக்க ஒரு தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.


தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிப்பது எளிதானது அல்ல. தற்போது 20.27 சதவீதமாக உள்ள தமிழகத்தின் பசுமை பரப்பு 25 சதவீதமாக அதிகரிக்க 7.5 லட்சம் ஹெக்டேர் அளவில் மரக்கன்றுகள் நடவேண்டும். செளமியா அன்புமணி போன்றவர்கள் வைத்துள்ள பசுமை தாயகம் போன்ற அமைப்புகள் தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க உதவும்'' என்று தெரிவித்தார்.




அதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:


"அறிவியல் என்னதான் வளர்ந்திருந்தாலும் சமூகத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு சமூகவியல் மிக மிக அவசியம், அந்த சமூகவியல் வழியில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். சமூகவியல் துறை சாதாரணமான படிப்பு அல்ல, எல்லா துறைக்கும் தாயாக விளங்குகிறது. பாரம்பரியமிக்க பாடமாகவும் உள்ளது.


சௌமியா சுவாமிநாதன் வீட்டில்  அனைவரும் மருத்துவராக இருந்தாலும் இந்த துறையை பற்றி கற்று கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். அன்புமணி என்னை தொடர்பு கொண்டு இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டும் என்று கூறினார்.


ஒரு மாநிலத்தில் சமூக வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். கல்விக்கு என்று மிகப்பெரிய பிரச்சினை வந்திருக்கிறது. இந்தி திணிப்பு என்பது அதிக அளவில் இருக்கிறது. சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்தி திணிப்புக்கு எதிராக மசோதாவை நிறைவேற்றுகிறார். விருப்பப்பட்டு படிப்பது வேறு; கட்டாயப்படுத்திப் படிக்க சொல்வது வேறு. தற்போது நாம் இந்தி எதிர்ப்பு தொடங்கும் முன் வங்காளத்தில் இந்தி எதிர்ப்பை தொடங்கி விட்டார்கள்." 


இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.